மீன் குட்டையில் சிக்கிய முதலை
மீன் குட்டையில் முதலை சிக்கியது.
கீழப்பழுவூர்:
மீன் பிடித்தார்
அரியலூர் மாவட்டம், குருவாடி கிராமத்தை சேர்ந்தவர் தேவேந்திரன். இவர் தனது வயலில் அமைந்துள்ள மீன் குட்டையில் நேற்று வலை மூலம் மீன் பிடித்துக் கொண்டிருந்தார். அப்போது வலையை இழுத்தபோது பாரமாக இருந்தது. இதையடுத்து சிலருடன் சேர்ந்து அவர் வலையை வெளியே எடுத்து பார்த்தபோது அதில் முதலை சிக்கியிருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தார்.
பின்னர் சுதாரித்துக்கொண்ட அவர் மற்றவர்கள் உதவியுடன் வலையில் இருந்த முதலையை பிடித்து கயிற்றால் கட்டினார். மேலும் இதுகுறித்து தூத்தூர் போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தார். போலீசார் இதுபற்றி வனத்துறைக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் சம்பவ இடத்திற்கு வந்த வனத்துறையினர், முதலையை மீட்டு அணைக்கரையில் விடும் பணியில் ஈடுபட்டனர்.
ஆற்றில் மேலும் முதலைகள்
குருவாடிக்கு அருகே செல்லும் கொள்ளிடம் ஆற்றில் இருந்து முதலை வந்திருக்கலாம் என்று பொதுமக்கள் கருதுகின்றனர். இதனால் கொள்ளிடம் ஆற்றில் மேலும் முதலைகள் இருக்குமோ? என்று அப்பகுதி மக்கள் அச்சமடைந்துள்ளனர். கடந்த சில நாட்களுக்கு முன்பு திருமானூர் கொள்ளிடம் ஆற்றில் முதலை தென்பட்டதும் குறிப்பிடத்தக்கது.
கொள்ளிடம் ஆற்றில் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை குளித்து வருகின்றனர். மேலும் கால்நடைகளுக்கும் ஆற்று தண்ணீர் பயன்படும் நிலையில் கொள்ளிடம் ஆற்றில் காணப்படும் முதலையால் உயிருக்கு ஆபத்து ஏற்படும் அபாயம் உள்ளதாக பொதுமக்கள் தெரிவிக்கின்றனர். எனவே கொள்ளிடம் ஆற்றில் முதலைகளை பிடிக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளனர்.