ஏரியின் நடுவே செயல்படும் நேரடி நெல் கொள்முதல் நிலையம்


ஏரியின் நடுவே செயல்படும் நேரடி நெல் கொள்முதல் நிலையம்
x

ஏரியின் நடுவே செயல்படும் நேரடி நெல் கொள்முதல் நிலையம் செயல்படுகிறது.

அரியலூர்

கீழப்பழுவூர்:

நெல் கொள்முதல் நிலையம்

அரியலூர் மாவட்டம், திருமானூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட சுள்ளங்குடி கிராமத்தில் ஏரி உள்ளது. மழை பெய்தால் ஊரின் வடிகால் தண்ணீர் அனைத்தும் இந்த ஏரிக்கு வந்து, ஏரி நிரம்பி வழியும். இந்நிலையில் இந்த ஏரிக்கு நடுவில் உள்ள பகுதியில் நேரடி நெல் கொள்முதல் நிலையம் செயல்பட்டு வருகிறது. கடந்த 2020-21-ம் ஆண்டில் இதே இடத்தில் நெல் கொள்முதல் நிலையம் செயல்பட்டு வந்தது.

இதனையடுத்து பல்வேறு அரசியல் கட்சியினரும், சமூக ஆர்வலர்களும் ஏரியில் நேரடி நெல் கொள்முதல் நிலையம் செயல்படக்கூடாது என்று அதிகாரிகளிடம் முறையிட்டனர். இதையடுத்து அந்த கொள்முதல் நிலையத்தை அப்புறப்படுத்தியதோடு, ஏரியில் கொள்முதல் நிலையம் அமைக்க அனுமதித்தது தொடர்பாக சம்பந்தப்பட்ட அதிகாரியை பணியிடை நீக்கம் செய்தனர்.

கோரிக்கை

இந்நிலையில் மீண்டும் அதே ஏரி பகுதியில் தற்போது நேரடி நெல் கொள்முதல் நிலையம் செயல்படுகிறது. மழை பெய்து ஏரியில் தண்ணீர் நிரம்பினால், அப்பகுதியில் குவித்து வைக்கப்பட்டிருக்கும் நெல் மூட்டைகள் பாதிக்கப்படும் நிலை ஏற்படலாம் என்ற அச்சத்தில் விவசாயிகள் இருந்து வருகின்றனர். எனவே அந்த நெல் கொள்முதல் நிலையத்தை அப்புறப்படுத்தி, வேறு இடத்துக்கு மாற்ற வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.


Next Story