போலீஸ் பிடியில் இருந்து தப்பி ஓடிய விவசாயி தூக்குப்போட்டு தற்கொலை
செஞ்சி அருகே விசாரணைக்காக அழைத்து செல்லப்பட்ட விவசாயி போலீஸ் பிடியில் இருந்து தப்பி ஓடி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதனால் போலீசாருடன் உறவினர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
செஞ்சி,
விழுப்புரம் மாவட்டம் மேல்மலையனூர் பகுதியை சேர்ந்தவர் 18 வயதுடைய இளம்பெண். மனநிலை பாதிக்கப்பட்ட இந்த இளம்பெண்ணை 2 பேர் பாலியல் பலாத்காரம் செய்ததாக தெரிகிறது.
இதுகுறித்து பாதிக்கப்பட்ட பெண்ணின் தாய் செஞ்சி அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதில் தனது மகளை சூரப்பன்தாங்கல் கிராமத்தை சேர்ந்த சம்பத் (வயது 59), ராமலிங்கம் ஆகியோர் பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர். எனவே அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறியிருந்தார்.
இதையடுத்து அனைத்து மகளிர் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜோதி தலைமையிலான போலீசார் சம்பத், ராமலிங்கம் ஆகியாரை விசாரணைக்காக அழைத்து செல்வதற்காக சூரப்பன்தாங்கல் கிராமத்திற்கு சென்றனர். முதலில் ராமலிங்கத்தையும், பின்னர் சம்பத்தையும் பிடித்தனர். அப்போது அங்கிருந்த சம்பத்தின் மகன் விவசாயி வெங்கடேசனையும் (35) போலீசார் பிடித்தனர்.
தூக்குப்போட்டு தற்கொலை
இதையடுத்து 3 பேரையும் போலீ்ஸ் வாகனத்தில் ஏற்றி விசாரணைக்காக செஞ்சி அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்துக்கு அழைத்து சென்றனர்.
அப்போது வழியில் வெங்கடேசன் இயற்கை உபாதை கழிக்க வேண்டும் என போலீசாரிடம் தெரிவித்துள்ளார். இதையடுத்து வாகனத்தை போலீசார் நிறுத்தியுள்ளனர்.
அப்போது இயற்கை உபாதை கழிக்க செல்வதாக கூறி சென்ற வெங்கடேசன் திடீரென அங்கிருந்து தப்பிஓடினார். இதில் பதறிய போலீசார் அவரை பிடிக்க துரத்தினர். இருப்பினும் வெங்கடேசன் அங்குள்ள வைக்கோல் போரில் ஏறி மரத்தில் கயிற்றால் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுபற்றி தகவல் அறிந்த வெங்கடேசனின் உறவினர்கள் மற்றும் பொதுமக்கள் சம்பவ இடத்துக்கு வந்து வழக்கில் தொடர்பு இல்லாத வெங்கடேசனை ஏன் போலீஸ் நிலையத்துக்கு விசாரணைக்காக அழைத்து சென்றீர்கள் எனக் கேட்டு போலீசாரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
போலீசார் மீது நடவடிக்கை
இது குறித்த தகவலி்ன் பேரில் வளத்தி போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று வாக்குவாதத்தில் ஈடுபட்ட உறவினர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது அவர்கள், போலீசார் தவறாக வெங்கடேசனை விசாரணைக்கு அழைத்து சென்றதால், அவர் அவமானம் தாங்கமுடியாமல் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். எனவே வெங்கடேசன் சாவுக்கு போலீசார்தான் காரணம். அதனால் போலீசார் மீது கடு்ம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
அது வரை உடலை பிரேத பரிசோதனைக்கு எடுத்து செல்ல அனுமதிக்கமாட்டோம் என கூறினர். அதைகேட்ட வளத்தி போலீசார், இது குறித்து உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதியளித்தனர். இதையடுத்து பொதுமக்கள் மற்றும் உறவினர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.
பரபரப்பு
அதனை தொடர்ந்து வெங்கடேசனின் உடலை போலீசார் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது தொடர்பாக வளத்தி போலீசார் மேற்கொண்டு விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.