முன்விரோதம் காரணமாக விவசாயியின் வீட்டுக்கு தீ வைப்பு


முன்விரோதம் காரணமாக  விவசாயியின் வீட்டுக்கு தீ வைப்பு
x

குளித்தலை அருகே முன்விரோதம் காரணமாக விவசாயியின் வீட்டுக்கு தீ வைத்தது தொடர்பாக 21 பேர் மீது போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.இந்த சம்பவம் குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-

கரூர்

தீ வைப்பு

கரூர் மாவட்டம், குளித்தலை அருகே உள்ள ரெத்தினம்பிள்ளை புதூரை சேர்ந்தவர் வீரப்பன் (வயது 62). விவசாயியான இவர், தனது மனைவி, மகன்கள் மற்றும் சகோதரியுடன் வசித்து வருகிறார். இந்தநிலையில் சம்பவத்தன்று முன்விரோதம் காரணமாக அதே பகுதியை சேர்ந்த சிலர் ஒன்று சேர்ந்து வீரப்பன் வீட்டின் முன்பு இருந்த கூரை மற்றும் வாகனங்களுக்கு பெட்ரோல் ஊற்றி தீ வைத்துவிட்டு அங்கிருந்து சென்றுள்ளனர். இதுகுறித்து அறிந்த வீரப்பன் உள்ளிட்டோர் உடனடியாக அங்கு சென்று தண்ணீரை ஊற்றி தீயை அணைக்க முயன்றனர். ஆனாலும் தீயை கட்டுப்படுத்த முடியவில்லை. இதுகுறித்து தகவல் அறிந்த முசிறி தீயணைப்பு துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து தண்ணீரை பீய்ச்சி அடித்து தீயை அணைத்தனர்.

21 பேர் மீது வழக்கு

இந்த விபத்தில் வீரப்பன் வீட்டில் நிறுத்தப்பட்டிருந்த மொபட், மோட்டார் சைக்கிள் மற்றும் வீட்டின் ஜன்னல், கதவு ஆகியவை சேதமடைந்துள்ளது. இதுகுறித்து தகவலறிந்த குளித்தலை போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து தீ விபத்து குறித்து விசாரணை நடத்தினர். இது தொடர்பாக வீரப்பன் கொடுத்த புகாரின்பேரில், ரெத்தினம் பிள்ளை புதூர் பகுதியை சேர்ந்த சரவணன், முருகானந்தம், நடராஜன், சக்தி உள்பட 21 பேர் மீது போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story