தனியார் நிதி நிறுவனத்திற்கு ரூ.2 லட்சத்து 60 ஆயிரம் அபராதம்


தனியார் நிதி நிறுவனத்திற்கு ரூ.2 லட்சத்து 60 ஆயிரம் அபராதம்
x

வாடிக்கையாளர் பெற்ற கடனுக்கு இன்சூரன்ஸ் செய்யாமல் ஏமாற்றிய தனியார் நிதி நிறுவனத்திற்கு ரூ.2 லட்சத்து 60 ஆயிரம் அபராதம் விதித்து திருவாரூர் நுகர்வோர் குறைதீர் ஆணையம் உத்தரவிட்டது

திருவாரூர்

வாடிக்கையாளர் பெற்ற கடனுக்கு இன்சூரன்ஸ் செய்யாமல் ஏமாற்றிய தனியார் நிதி நிறுவனத்திற்கு ரூ.2 லட்சத்து 60 ஆயிரம் அபராதம் விதித்து திருவாரூர் நுகர்வோர் குறைதீர் ஆணையம் உத்தரவிட்டது

ரூ.8 லட்சம் கடன்

திருவாரூர் மாவட்டம் வாழ்க்கை கிராமத்தை சேர்ந்தவர் ஜாகிர் உசேன். இவர் தனது வீட்டின் அருகில் இரும்பு கடை வைத்து நடத்தி வந்துள்ளார். இந்த நிலையில் திருச்சி தில்லைநகரில் இயங்கி வரும் ஒரு தனியார் நிதி நிறுவனத்தில் தனது மனைவிக்கு சொந்தமான வீட்டு பத்திரத்தை அடமானம் வைத்து ரூ.8 லட்சம் கடன் பெற்றுள்ளார்.

தனியார் நிறுவனம் கடந்த 2019 ஆண்டு ஜூன் 24-ந் தேதி அன்று முதல் தவணையாக ஜாகிர் உசேன் வங்கி கணக்கில் ரூ.6 லட்சம் வரவு வைத்துள்ளது. அதனைத் தொடர்ந்து ரூ.1 லட்சத்து 15 ஆயிரம் வரவு வைத்துள்ளது ஆக மொத்தம் ரூ.7 லட்சத்து 15 ஆயிரம் மட்டும் அவரது வங்கி கணக்கில் நிதி நிறுவனம் சார்பில் செலுத்தப்பட்டுள்ளது. மீதமுள்ள ரூ.85 ஆயிரம் குறித்து ஜாகிர் உசேன் நிதி நிறுவனத்திடம் கேட்டபோது விபத்து மற்றும் ஆயுள் காப்பீடு செய்துள்ளதாக தெரிவித்துள்ளனர்.

நரம்பியல் நோய்

இந்த நிலையில் ஜாகிர் உசேன் மாதம் ரூ.19 ஆயிரத்து 500 ரூபாய் வீதம் 9 தவணை கட்டி முடித்த பின்பு அவருக்கு திடீரென்று ஏற்பட்ட நரம்பியல் மற்றும் பராலிஸ் நோயின் காரணமாக கடந்த 2020 -ம் ஆண்டு பிப்ரவரி முதல் சம்பாதிக்கும் திறனை இழந்து படுத்த படுக்கையாய் சிகிச்சை பெற்று வந்திருக்கிறார். இதன் காரணமாக ஜாகிர் உசேன் தனது மனைவி மூலம் நிதி நிறுவனத்திடம் மேற்படி சிகிச்சைக்காக காப்பீடு செய்யப்பட்டதற்கான காப்பீடு சான்று கேட்டதற்கு அவர்கள் வழங்க மறுத்துள்ளனர். இதன் காரணமாக ஜாகிர் உசேன் கடன் பெற்று மருத்துவ செலவு செய்ததாக கூறப்படுகிறது.

மேலும் கடந்த 2020 -ம் ஆண்டு அக்டோபர் மாதம் காப்பீடு சான்று கேட்டும் காப்பீடு தொகை பெற்று கடனை அடைக்கும் காலம் வரை என்னையோ எனது உறவுக்காரர்களையோ நிதி நிறுவனம் பணம் கேட்டு தொந்தரவு செய்யக்கூடாது என அறிவுறுத்தி வக்கீல்கள் மூலம் இரண்டு முறை நோட்டீஸ் அனுப்பியும் நிதி நிறுவனம் அதற்கு பதில் அளிக்கவில்லை என்று கூறப்படுகிறது.

காலம் கடந்து காப்பீடு

அதேசமயம் நிதி நிறுவனம் கடந்த 2021-ம் ஆண்டு பிப்ரவரி மாதம்11-ந் தேதி அன்று தனியார் இன்சூரன்ஸ் கம்பெனியில் அவரது பெயரில் காப்பீடு செய்ததற்கான ஆதாரமாக நிதி நிறுவன ஊழியர் ஒருவரின் வாட்ஸ் அப் எண் மூலம் ஜாகிர் உசேனின் நண்பர் சிவக்குமாரின் வாட்ஸ் அப் எண்ணிற்கு ஆவணத்தை அனுப்பி உள்ளனர்.

தனியார் நிதி நிறுவனம் ரூ.85 ஆயிரம் பிடித்து கொண்ட தேதியான 2019-ம் ஆண்டு ஜூன் 24-ந் அன்று காப்பீடு செய்யாமல் காலம் கடந்து மனுதாரர் நோய்வாய்ப்பட்டு சம்பாதிக்கும் திறனை இழந்து மருத்துவ சிகிச்சை பெரும் சூழலுக்கு தள்ளப்பட்ட பிறகு 19 மாதத்திற்குபின்பு காப்பீடு செய்துள்ளதாக கூறி சேவை குறைபாடு மற்றும் மன உளைச்சலுக்கு நஷ்ட ஈடு கொடுக்க வேண்டும் என கேட்டு வக்கீல் மூலம் அறிவிப்பு அனுப்பி வைத்தும் எந்தவித இழப்பீடும் பதிலும் நிதி நிறுவனம் அளிக்கவில்லை என்று கூறப்படுகிறது. இதனையடுத்து ஜாகிர் உசேன் திருவாரூர் நுகர்வோர் குறைதீர் ஆணையத்தில் நிதி நிறுவனம் தனக்கு ரூ.30 லட்சம் நஷ்ட ஈடு வழங்க வேண்டும் என கோரி வழக்கு தொடர்ந்து உள்ளார்.

இழப்பீடு வழங்க உத்தரவு

இந்த வழக்கை விசாரித்த மாவட்ட குறைதீர் ஆணைய தலைவர் சக்கரவர்த்தி, உறுப்பினர்கள் லட்சுமணன் பாக்கியலட்சுமி அடங்கிய அமர்வு தீர்ப்பு அளித்தது. இந்த தீர்ப்பில் தனியார் நிதி நிறுவனம் புகார்தாரரை ஏமாற்றும் நோக்கில் சேவை குறைபாடு மற்றும் நியாயமற்ற வர்த்தக நடைமுறை ஏற்படுத்தியுள்ளதால் புகார் தாரருக்கு ரூ.2 லட்சத்தை இழப்பீடாக வழங்க வேண்டும் என்றும், மேலும் மன உளைச்சல் மற்றும் பொருள் நஷ்டத்திற்கு ரூ.50 ஆயிரத்தை இழப்பீடாக வழங்க வேண்டும் என்றும் வழக்கு செலவு தொகையாக ரூ.10 ஆயிரத்தை நிதி நிறுவனம் வழங்க வேண்டும் என்றும் உத்தரவிட்டது.

மேலும் புகார்தாரருக்கு இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்ட நாளில் இருந்து ஒரு மாத காலத்திற்குள் இழப்பீட்டு தொகையை வழங்க வேண்டும் என்றும் உத்தரவிட்டது. தவறும் பட்சத்தில் இழப்பீடு தொகைகளுக்கு மட்டும் இந்த உத்தரவு பிறப்பித்த தேதியில் இருந்து 9 சதவீத ஆண்டு வட்டியுடன் சேர்த்து வழங்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளது.


Next Story