காசிமேட்டில் குடிபோதை தகராறில் நண்பரை அடித்துக்கொன்ற மீனவர்


காசிமேட்டில் குடிபோதை தகராறில் நண்பரை அடித்துக்கொன்ற மீனவர்
x

காசிமேட்டில் குடிபோதையில் ஏற்பட்ட தகராறில் நண்பரை அடித்துக்கொன்ற மீனவர் கைது செய்யப்பட்டார்.

சென்னை

சென்னை புதுவண்ணாரப்பேட்டை அன்னை சத்யா நகரைச் சேர்ந்தவர் வேலு (வயது 47). இவர், காசிமேட்டில் மீன்பிடி தொழில் செய்து வந்தார். அதே பகுதியில் திருவல்லிக்கேணி அயோத்தியா நகரை சேர்ந்த பரசுராமன் (47) என்பவரும் மீன்பிடி தொழில் செய்து வந்தார். இவர்கள் இருவரும் நண்பர்கள் ஆவார்கள்.

கடந்த மாதம் 27-ந்தேதி வேலு, பரசுராமன் மற்றும் உடன் வேலை பார்க்கும் 7 பேர் சேர்ந்து ராஜ் என்பவருக்கு சொந்தமான 2 பைபர் படகில் மீன்பிடி தொழிலுக்கு சென்று திரும்பினர். கரைக்கு திரும்பிய வேலு, சகாயம் மற்றும் பரசுராமன் ஆகிய 3 பேரும் முத்தையா தெருவில் உள்ள டாஸ்மாக் கடைக்கு மது குடிக்க சென்றனர்.

அப்போது சகாயத்துக்கும், வேலுக்கும் போதை தலைக்கு ஏறியதில் தகராறு ஏற்பட்டது. சகாயத்துக்கு ஆதரவாக பரசுராமன் பேசினார். பின்னர் அவர்கள் அங்கிருந்து சென்று விட்டனர்.

அன்று நள்ளிரவு காசிமேடு நாகூரான் தோட்டம் பைபர் படகுகள் நிறுத்தும் வார்ப்பு பகுதியில் வேலு இருந்தார். அப்போது அங்கு வந்த பரசுராமனிடம், எதற்காக சகாயத்துக்கு ஆதரவாக பேசினாய்? என்று கேட்டு வேலு தகராறு செய்தார்.

போதையில் இருந்த பரசுராமன், ஆத்திரமடைந்து வேலுவின் கழுத்தில் தாக்கினார். மேலும் தொடர்ந்து காலால் கழுத்தில் எட்டி உதைத்தார். இதில் பலத்த காயம் அடைந்த வேலு சம்பவ இடத்திலேயே மயங்கி விழுந்தார். உடனே வேலுவை இரவு முழுவதும் பைபர் படகில் உள்ள ஐஸ் பெட்டியில் வைத்தார். மறுநாள் காலையில் மீன் வலை பின்னும் கூடத்தில் உயிருக்கு போராடும் நிலையில் இருந்த வேலுவை போட்டு விட்டு தப்பிச் சென்று விட்டார்.

இதைப்பார்த்த காசிமேடு பகுதியைச் சேர்ந்த வீரப்பன் என்பவர் காசிமேடு மீன்பிடி துறைமுக போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். சம்பவ இடத்துக்கு வந்த போலீசார் உயிருக்கு போராடிய வேலுவை மீட்டு அரசு ஸ்டான்லி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி வேலு கடந்த 1-ந்தேதி பரிதாபமாக உயிரிழந்தார்.

பிரேத பரிசோதனை அறிக்கையில் வேலு கழுத்தை நெரித்து கொலை செய்யப்பட்டது தெரிய வந்தது. இதையடுத்து தீவிர விசாரணைக்கு பிறகு போலீசார் தலைமறைவாக இருந்த பரசுராமனை கைது செய்து சிறையில் அடைத்தனர்.


Next Story