மலையடிப்பட்டியில் தண்டவாளத்தை கடக்க மேம்பாலம் அமைக்க வேண்டும்; வாகன ஓட்டிகள் கோரிக்கை


மலையடிப்பட்டியில் தண்டவாளத்தை கடக்க மேம்பாலம் அமைக்க வேண்டும்; வாகன ஓட்டிகள் கோரிக்கை
x

மலையடிப்பட்டியில் தண்டவாளத்தை கடக்க மேம்பாலம் அமைக்க வேண்டும் என்று வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

திருச்சி

மணப்பாறை:

ரெயில்வே கேட்

திருச்சி மாவட்டம், மலையடிப்பட்டியில் திருச்சி - திண்டுக்கல் மார்க்கமாக செல்லும் ரெயில்வே தண்டவாளம் உள்ளது. இந்த தண்டவாளத்தை கடந்து செல்ல மேம்பாலமோ, சுரங்கப்பாதையோ கிடையாது. அந்த பகுதியில் உள்ள ரெயில்வே கேட் வழியாகத்தான் பொதுமக்கள், வாகன ஓட்டிகள் சென்று வருகின்றனர். குறிப்பாக மலையடிப்பட்டியை சுற்றியுள்ள 50-க்கும் மேற்பட்ட கிராமங்களை இந்த சாலைதான் இணைக்கிறது.

இந்த கிராம மக்கள் பல்வேறு வேலைகளுக்கு செல்லவும், மாணவ-மாணவிகள் பள்ளி, கல்லூரிகளுக்கு செல்லவும் திருச்சி, திண்டுக்கல் மற்றும் மணப்பாறை போன்ற நகரங்களுக்கு சென்றுவர வேண்டும் என்றாலும் இந்த ரெயில்வே கேட்டை கடந்துதான் செல்ல வேண்டும். குறிப்பாக 3 மினி பஸ்கள், பள்ளி, கல்லூரி வாகனங்கள், விவசாய வாகனங்கள், ஆம்புலன்சுகள் என தினமும் இந்த ரெயில்வே கேட்டை சுமார் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வாகனங்கள் கடந்து செல்கின்றன.

மேம்பாலம் அமைக்க வேண்டும்

ஆனால் பள்ளி, கல்லூரிக்கு சென்று திரும்பும் நேரத்திலும், அலுவலகங்களுக்கு வாகனங்களில் சென்று திரும்பும் நேரத்திலும் காலை மற்றும் மாலையில் இந்த ரெயில்வே கேட் அடைக்கப்படுகிறது. இதனால் அந்த வழியாக செல்பவர்களுக்கு கால விரையமும், மாணவ, மாணவிகள் பள்ளி, கல்லூரிகளுக்கு செல்வதில் தாமதமும் ஏற்படுகிறது.

குறிப்பாக செட்டியப்பட்டி அரசு ஆஸ்பத்திரியில் இருந்து மணப்பாறை அரசு ஆஸ்பத்திரிக்கு ஆம்புலன்சில் செல்லும்போது, ரெயில்வே கேட் அடைக்கப்பட்டு இருந்தால் நோயாளிகள் சிரமம் அடைகிறார்கள். எனவே இந்த பகுதியில் ரெயில்வே கேட்டுக்கு பதிலாக மேம்பாலம் அல்லது சுரங்கப்பாலம் அமைக்க வேண்டும் என்று அப்பகுதி பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


Next Story