திருவள்ளூர் அருகே மோட்டார் சைக்கிள் மீது லாரி மோதி அரசு அதிகாரி பலி


திருவள்ளூர் அருகே மோட்டார் சைக்கிள் மீது லாரி மோதி அரசு அதிகாரி பலி
x

திருவள்ளூர் அருகே மோட்டார் சைக்கிள் மீது லாரி மோதி அரசு அதிகாரி பலியானார். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் லாரி டிரைவரை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

திருவள்ளூர்

மத்திய அரசு அதிகாரி

ஆவடியில் உள்ள தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய குடியிருப்பு பகுதியில் வசித்து வந்தவர் அண்ணாதுரை (வயது 50). இவர் ஆவடியில் உள்ள மத்திய அரசு பாதுகாப்பு துறை நிறுவனமான கனரக வாகன தொழிற்சாலையில் மேலாளராக பணியாற்றி வந்தார். அந்த ஆலையில் பீரங்கி தயாரிக்கப்படுகிறது. நேற்று காலை அண்ணாதுரை மோட்டார் சைக்கிளில் ஆவடியில் இருந்து திருவள்ளூர் வழியாக திருத்தணி நோக்கி சென்றுக்கொண்டிருந்தார்.

பலி

அப்போது திருவள்ளூர் அடுத்த சிறுவானூர் அருகே சி.டி.எச் சாலையில் சென்றுக்கொண்டிருந்த போது திருவள்ளூர் நோக்கி சவுடு மண் ஏற்றிக்கொண்டு வேகமாக வந்த லாரி அண்ணாதுரை மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் மோட்டார் சைக்கிளில் இருந்து தூக்கி வீசப்பட்ட அண்ணாதுரை தலையில் பலத்த காயம் அடைந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.

இதுகுறித்து தகவல் கிடைத்ததும் சம்பவ இடத்திற்கு வந்த திருவள்ளூர் தாலுகா போலீசார் அண்ணாதுரை உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருவள்ளூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் விபத்தை ஏற்படுத்திய சென்னை முகப்பேர் மேற்கு பகுதியைச் சேர்ந்த லாரி டிரைவர் பழனிசாமி (51) என்பவரை கைது செய்து விசாரித்து வருகின்றனர். உயிரிழந்த அண்ணாதுரைக்கு மனைவி மற்றும் 2 மகள்கள் உள்ளனர்.


Next Story