கட்டுமஸ்தான உடலை காட்டி ஏமாற்றிய ஆணழகன்: ஆசை வலையில் வீழ்ந்த பல பெண்கள் - அதிர்ச்சி சம்பவம்


கட்டுமஸ்தான உடலை காட்டி ஏமாற்றிய ஆணழகன்: ஆசை வலையில் வீழ்ந்த பல பெண்கள் - அதிர்ச்சி சம்பவம்
x
தினத்தந்தி 24 March 2024 6:17 PM GMT (Updated: 25 March 2024 1:01 AM GMT)

உடற்பயிற்சி கூடத்துக்கு வந்த பெண்களிடம் தனது கட்டுமஸ்தான உடலை காட்டி அவர்களை மயக்கி உள்ளார்.

பூந்தமல்லி,

கட்டுமஸ்தான உடலை காட்டி மயக்கி திருமண ஆசைவார்த்தை கூறி பல பெண்களை ஏமாற்றிய ஆணழகனை போலீசார் தேடி வருகின்றனர்.

பூந்தமல்லி அடுத்த காட்டுப்பாக்கத்தில் சொந்தமாக உடற்பயிற்சி கூடம் நடத்தி வந்தவர் மணிகண்டன்(வயது 33). இவர், உலக ஆணழகன் பட்டம் பெற்றவர். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு சந்தியா என்ற பெண், சமூக வலைதள பக்கம் மூலம் இவருக்கு அறிமுகமானார். பின்னர் இவரது உடற்பயிற்சி கூடத்துக்கு வந்தவர், மணிகண்டனுடன் நெருங்கி பழகினார்.

மேலும் அந்த பெண்ணை திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி பழகிய மணிகண்டன், அதன்பிறகு திருமணம் செய்ய மறுத்தார். இதனால் அவர்களுக்குள் ஏற்பட்ட தகராறில் அந்த பெண்ணை சரமாரியாக தாக்கினார். இதில் படுகாயம் அடைந்த சந்தியா அளித்த புகாரின்பேரில் பூந்தமல்லி அனைத்து மகளிர் போலீசார் மணிகண்டனை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

பின்னர் சிறையில் இருந்து வெளியே வந்த மணிகண்டன், சமூக வலை தளங்கள் மற்றும் 'யூடியூப்'களில் ஏழைகளுக்கு உதவி செய்வது போல் வீடியோக்களை வெளியிட்டு வந்தார். அப்போது கவிதா என்ற பெண்ணுடன் பழக்கம் ஏற்பட்டது. அவரை திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி ஏமாற்றி வந்தார். அவருடன் தொடர்பில் இருக்கும்போதே அவருக்கு தெரியாமல் வைஷ்ணவி என்ற பெண்ணை திருமணம் செய்து கொண்டு வசித்து வந்தார். மேலும் உடற்பயிற்சி கூடத்துக்கு வந்த பெண்களிடம் தனது கட்டுமஸ்தான உடலை காட்டி மயக்கினார். பல பெண்களிடம் ஒருவருக்கொருவர் தெரியாமல் தனித்தனியாக திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தைகள் கூறி பழகி வந்தார். அப்போது அவர்களிடம் பணம் வாங்கியதாகவும் கூறப்படுகிறது. அதன்பிறகு உடற்பயிற்சி கூடம் நடத்துவதை நிறுத்தி விட்டு சமூக வலைதளங்களில் வீடியோ வெளியிடுவதில் முழுகவனம் செலுத்த தொடங்கினார்.

இந்தநிலையில் 'யூடியூப்பில்' தனியார் நிகழ்ச்சி ஒன்றில் வேறொரு பெண்ணை தனது மனைவி என கூறி மணிகண்டன் அறிமுகம் செய்து வைத்துள்ளார். அந்த வீடியோவை பார்த்து அதிர்ச்சி அடைந்த கவிதா, வைஷ்ணவி இருவரும் இதுபற்றி மணிகண்டனிடம் கேட்டனர். இதனால் அவர்கள் இருவரையும் சரமாரியாக தாக்கியதாக கூறப்படுகிறது. இதுகுறித்து ஆவடி போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் கவிதா, வைஷ்ணவி இருவரும் தனித்தனியாக புகார் அளித்தனர். அந்த புகாரின் மீது உரிய நடவடிக்கை எடுக்காததால் கவிதா கடிதம் எழுதி வைத்துவிட்டு தற்கொலைக்கு முயற்சி செய்தார். இதற்காக அவர் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றார்.

இதையடுத்து இந்த புகார் மனு போரூர் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்துக்கு மாற்றப்பட்டது. அவர்கள் நடத்திய விசாரணையில், மணிகண்டனுக்கு பல பெண்களுடன் தொடர்பு இருப்பதும், அந்த பெண்களை திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி ஏமாற்றியதும் தெரியவந்தது.

இதையடுத்து கவிதா, வைஷ்ணவி இருவரும் அளித்த புகாரின்பேரில் ஆணழகன் மணிகண்டன் மீது போரூர் அனைத்து மகளிர் போலீசார் தனித்தனியாக மூன்று பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதுபற்றி அறிந்த மணிகண்டன் தலைமறைவாகி விட்டார். அவரை போலீசார் தேடி வருகின்றனர்.


Next Story