சங்ககிரி அருகே நூற்பாலை ஊழியர் கல்லால் தாக்கி கொலை மனைவி, மைத்துனர் கைது
சங்ககிரி அருகே நூற்பாலை ஊழியர் கல்லால் தாக்கி கொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக மனைவி, மைத்துனரை போலீசார் கைது செய்தனர்.
சங்ககிரி
நூற்பாலை ஊழியர்
சேலம் மாவட்டம், சங்ககிரி அருகே மோரூர் கிழக்கு ஊராட்சி தாசநாயக்கன் பாளையம் அருந்ததியர் தெருவை சேர்ந்தவர் தனபால் (வயது 44). இவர் கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்பு அதே ஊரை சேர்ந்த சரிதா (38) என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு ஜெயஸ்ரீ (20) என்ற மகளும், ரித்தீஷ்(18) என்ற மகனும் உள்ளனர்.
தனபால் நாமக்கல் மாவட்டம், குமாரபாளையத்தில் உள்ள தனியார் நூற்பாலையில் மேற்பார்வையாளராக வேலை பார்த்து வந்தார். இவருக்கும், மனைவி சரிதாவுக்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது.
இதனால் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு கணவன்-மனைவி இருவரும் பிரிந்து தனித்தனியாக வசித்து வந்துள்ளனர். இருப்பினும் பலமுறை தனபால் தன்னுடைய மனைவியை சேர்ந்து வாழ அழைத்த போது அவர் மறுத்து விட்டார். மேலும் தனபாலின் மோட்டார் சைக்கிளின் ஆர்.சி.புத்தகம், வங்கி ஏ.டி.எம். கார்டு ஆகியவற்றை சரிதாவும், சரிதாவின் அண்ணன் சரவணனும் வாங்கி வைத்து கொண்டு தரமறுத்து விட்டதாக தெரிகிறது.
சேர்ந்து வாழ...
நேற்று முன்தினம் இரவு 9 மணியளவில் தாசநாயக்கன்பாளையத்தில் கோவில் பூசாரி பழனியப்பன் வீட்டுக்கு தனபால் சென்றார். அப்போது அவர், மைத்துனரிடம் உள்ள தனது மோட்டார் சைக்கிள் ஆர்.சி. புத்தகத்தை வாங்கி தருமாறு கூறி உள்ளார். மேலும் மனைவி தன்னுடன் சேர்ந்து வாழ்ந்திட பழனியப்பன் பேச்சுவார்த்தை நடத்துமாறும் அவர் கேட்டு கொண்டுள்ளார்.
இதையறிந்த சரிதா, மைத்துனர் சரவணன் ஆகியோர் தனபால் நின்று கொண்டிருந்த பழனியப்பன் வீட்டின் அருகே வந்தனர். அங்கு சரவணன், தனபாலை பார்த்து எனது தங்கையின் வாழ்க்கையை கெடுத்ததும் இல்லாமல், நீ பஞ்சாயத்து பேச வந்துட்டியா என்று கேட்டுள்ளார். மேலும் சரவணனும், சரிதாவும் தனபாலை மாறி, மாறி அடித்ததாக கூறப்படுகிறது.
கல்லால் தாக்கி கொலை
அப்போது சரிதா தனது அண்ணனிடம், இவன் (கணவர்) உயிருடன் இருந்தால் எனது வாழ்க்கை எப்பவும் பிரச்சினை தான் அண்ணா, அவனை கொன்று விடு என்று கூறி உள்ளாராம். உடனே தனபாலை மைத்துனர் சரவணன் கீழே தள்ளிவிட்டு, அங்கு கிடந்த கல்லை எடுத்து அவரது இடதுபக்க தலையில் தாக்கியதாக தெரிகிறது. இதில் தனபால் பேச்சுமூச்சின்றி மயங்கினார். உடனே அண்ணன், தங்கை இருவரும் அங்கிருந்து சென்று விட்டனர்.
இதனிடையே அந்த பகுதியை சேர்ந்தவர்கள் ஆம்புலன்சை வரவழைத்து சங்ககிரி அரசு ஆஸ்பத்திரிக்கு தனபாலை கொண்டு ெசன்றனர். ஆனால் செல்லும் வழியிலேயே அவர் இறந்து விட்டார்.
மனைவி, மைத்துனர் கைது
இந்த சம்பவம் குறித்து சங்ககிரி போலீசில் தனபாலின் தந்தை சின்னப்பன் புகார் செய்தார். அதன்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் தேவி, சப்-இன்ஸ்பெக்டர் சுதாகரன் ஆகியோர் வழக்குபதிவு செய்து விசாரித்தனர்.
மேலும் இந்த கொலை தொடர்பாக தனபாலின் மனைவி சரிதா, மைத்துனர் சரவணன் ஆகியோரை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். நூற்பாலை ஊழியரை அவருடைய மனைவியும், மைத்துனரும் சேர்ந்து கொலை செய்த சம்பவம் சங்ககிரி அருகே பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.