கோட்டை ரெயில் நிலையத்தில் மகள்களை காப்பாற்ற உயிரை விட்ட தாய்; ரெயில் சக்கரத்தில் சிக்கி உடல் துண்டாகி பலி
கோட்டை ரெயில் நிலையத்தில் மின்சார ரெயில் சக்கரத்தில் சிக்கி உடல் துண்டாகி பெண் பலியானார். தனது மகள்களை காப்பாற்ற தாய் உயிரை விட்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியது.
தண்டவாளத்தை கடக்க முயற்சி
சென்னை திருவல்லிகேணியை சேர்ந்தவர் ஏழுமலை (வயது 48). இவருடைய மனைவி சித்ரா (43). இவர்களுக்கு 2 மகள்கள் உள்ளனர். நேற்று சித்ரா தனது 2 மகள்களுடன் பொருட்கள் வாங்குவதற்காக தியாகராய நகர் சென்றார். அங்கு பொருட்களை வாங்கிவிட்டு மாம்பலம் ரெயில் நிலையத்தில் இருந்து கடற்கரை நோக்கி செல்லும் மின்சார ரெயிலில் ஏறி பயணம் செய்தார். சென்னை கோட்டை ரெயில் நிலையம் வந்ததும், ரெயிலில் இருந்து இறங்கிய சித்ரா மற்றும் அவரது மகள்கள் கடற்கரையிலிருந்து வேளச்சேரி செல்லும் மின்சார ரெயிலில் ஏறுவதற்காக தண்டவாளத்தை கடந்து செல்ல முயன்றனர்.
உடல் துண்டாகி பலி
அப்போது கடற்கரையில் இருந்து வேளச்சேரி நோக்கி மின்சார ரெயில் வந்து கொண்டிருந்தது. திடீரென ரெயில் அருகில் வருவதை பார்த்த சித்ரா பதற்றம் அடைந்து தண்டவாளத்தை வேகமாக கடக்க முயன்றார். ரெயில், தனது மகள்கள் மீது மோதாமல் இருப்பதற்காக சித்ரா, மகள்கள் இருவரையும் தண்டவாளத்தில் இருந்து வெளியே தள்ளிவிட்டார். இதில், சித்ரா நிலைதடுமாறி தண்டவாளத்தில் விழுந்தார். அப்போது மின்சார ரெயில் சக்கரம் சித்ரா மீது ஏறி சென்றது. இதில் மகள்கள் கண் எதிரேயே சித்ரா உடல் துண்டாகி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.
இதுகுறித்து தகவல் அறிந்து வந்த எழும்பூர் ரெயில்வே போலீசார் பலியான சித்ராவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ராஜீவ் காந்தி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து எழும்பூர் ரெயில்வே போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். தனது மகள்களை காப்பாற்ற தாய் உயிரை விட்ட சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.
மற்றொரு சம்பவம்
சிவகங்கை மாவட்டம் பொன்மலை பகுதியை சேர்ந்தவர் சின்னகருப்பு (வயது 57). இவர், சென்னை சென்டிரல் பகுதியில் தனியார் நிறுவனம் ஒன்றில் பாதுகாவலராக வேலை பார்த்து வந்தார். நேற்று காலை வேலைக்கு செல்வதற்காக ரெயில் ஏறுவதற்கு சென்னை எழும்பூர் ரெயில் நிலையம் வந்தார். அப்போது தண்டவாளத்தை கடந்து செல்ல முயன்றபோது தாம்பரத்திலிருந்து கடற்கரை நோக்கி வந்த மின்சார ரெயில மோதியது. இதில் சின்ன கருப்பு உடல் சிதறி பரிதாபமாக இறந்தார். இது குறித்து எழும்பூர் ரெயில்வே போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.