கிணத்துக்கடவு அருகே நின்ற பஸ் மீது மோட்டார் சைக்கிள் மோதல்; நில அளவையர் சாவு
கிணத்துக்கடவு அருகே நின்ற அரசு பஸ் மீது மோட்டார் சைக்கிள் மோதி நில அளவையர் பரிதாபமாக இறந்தார்.
கிணத்துக்கடவு
கிணத்துக்கடவு அருகே நின்ற அரசு பஸ் மீது மோட்டார் சைக்கிள் மோதி நில அளவையர் பரிதாபமாக இறந்தார்.
அரசு பஸ் மீது மோதல்
திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே உள்ள அந்தியூர் பகுதியைச் சேர்ந்தவர் கன்னிமுத்து (வயது 39). இவர் தனியார் சர்வேயராக (நில அளவையர்) உள்ளார். கடந்த 24-ந் தேதி காலை தனது மோட்டார் சைக்கிளில் வேலைவிஷயமாக கோவை மாவட்டம் கிணத்துக்கடவு வந்தார். பின்னர் வேலையை முடித்து விட்டு மீண்டும் தனது ஊருக்கு கிளம்பினார்.
கோவை -பொள்ளாச்சி நான்கு வழிச்சாலையில் கோவில்பாளையம் சேரன் நகர் பகுதியில் மோட்டார் சைக்கிள் வந்த போது, கிணத்துக்கடவிலிருந்து பொள்ளாச்சி சென்ற அரசு டவுன் பஸ் சேரன் நகர் பகுதியில் ரோட்டில் நின்று பயணிகளை ஏற்றி, இறக்கிக் கொண்டிருந்தது. அப்போது கன்னிமுத்து ஓட்டி வந்த மோட்டார் சைக்கிள் திடீரென நிலை தடுமாறி பஸ்சின் பின்பக்கத்தில் மோதியது.
சிகிச்சை பலனின்றி சாவு
இந்த விபத்தில் பலத்த காயமடைந்த கன்னிமுத்துவை அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக பொள்ளாச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு முதலுதவி சிகிச்சை பெற்ற கன்னிமுத்துவை மேல் சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு கன்னிமுத்துவுக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சையளித்தும் பலனிக்காமல் நேற்று காலை பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து கிணத்துக்கடவு போலீஸ் இன்ஸ்பெக்டர் முத்துப்பாண்டி வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றார்.
விபத்தில் இறந்த கன்னிமுத்துக்கு ரேவதி என்ற மனைவியும், பிறந்து 9 மாதங்கள் ஆன ஆண் குழந்தையும் உள்ளது.