போதை பொருளாக பயன்படும் இருமல் மருந்து


போதை பொருளாக பயன்படும் இருமல் மருந்து
x

திண்டுக்கல் அருகே உள்ள பகுதியில் இருமல் மருந்தை போதைப்பொருளாக இளைஞர்கள் பயன்படுத்துவதாக புகார் எழுந்துள்ளது.

திண்டுக்கல்

திண்டுக்கல் அருகே பித்தளைப்பட்டி குட்டியபட்டி சாலையில் ஆலமரம் ஒன்று உள்ளது. அங்கு தினமும் இரவு 7 மணி அளவில் அப்பகுதியை சேர்ந்த ஏராளமான இளைஞர்கள் மோட்டார் சைக்கிளில் வருகின்றனர். இவர்கள் மருந்து கடைகளில் இருந்து இருமல் மருந்து பாட்டில்களையும் வாங்கி வருகின்றனர். பின்னர் அந்த மருந்தை போதைக்காக பயன்படுத்தி வருவதாக கூறப்படுகிறது. இதற்கு அந்த பகுதியில் குவிந்து கிடக்கும் காலிபாட்டில்களே சான்றாக உள்ளது.

ஆட்கள் நடமாட்டம் இல்லாத இருட்டான பகுதி என்பதால் தங்களுக்கு சாதகமாக பயன்படுத்தி வருகின்றனர். செல்போன், கொசுவர்த்தியுடன் அங்கு வருகை தரும் இளைஞர்கள், மாணவர்கள் இரவு வரை அங்கு பொழுதை கழிக்கின்றனர். இருமல் மருந்தை அளவுக்கு அதிகமாக குடிப்பதால் போதை ஏறும் என்று கூறப்படுகிறது. இதனை தெரிந்து கொண்ட மாணவர்கள், இளைஞர்கள் இருமல் மருந்துகளை வாங்கி வந்து குடிக்கின்றனர்.

இதுகுறித்து மருந்துகள் ஆய்வாளர் கூறுகையில், டாக்டர் பரிந்துரை இல்லாமல் மருந்து கடைகளில் குறிப்பிட்ட சில மருந்துகளை வழங்கக்கூடாது என உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இருமல் மருந்தை அதிகளவில் பயன்படுத்தும்போது, நரம்பு மண்டலம் பாதிக்கப்பட்டு பக்க விளைவுகள் ஏற்படும். எனவே மாணவர்கள், இளைஞர்கள் இருமல் மருந்தை பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும். டாக்டர் பரிந்துரை இல்லாமல் இருமல் மருந்து விற்பனை செய்யும் மருந்து கடை உரிமையாளர்கள் மீது சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தப்படும் என்றார்.


Next Story