சிதம்பரத்தில் ரூ.15 கோடியில் புதிய பஸ் நிலையம் :அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் அடிக்கல் நாட்டினார்

சிதம்பரத்தில் ரூ.15 கோடியில் புதிய பஸ் நிலையம் கடுமான பணியை அமைச்சர் எம்.ஆா்.கே. பன்னீர்செல்வம் அடிக்கல் நாட்டி தொடங்கி வைத்தார்.
புவனகிரி,
சிதம்பரம் நகராட்சி பகுதியில் உள்ள பஸ் நிலையம் போதிய இட வசதிகள் இல்லாமல் உள்ளது. இதனால் அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது. இந்த நிலையில், சிதம்பரத்தில் புதிதாக பஸ் நிலையம் அமைக்க வேண்டும் என்கிற கோரிக்கையை பொதுமக்கள் அரசுக்கு முன்வைத்தனர்.
இதையடுத்து, சிதம்பரம் நகர எல்லைப் பகுதியில் உள்ள மேல் புவனகிரி ஒன்றியம் லால்புரம் ஊராட்சியில் சிதம்பரம் நகராட்சிக்கு சொந்தமான இடம் தேர்வு செய்யப்பட்டு, அங்கு ரூ.15 கோடி செலவில் புதிய பஸ் நிலையம் அமைக்கப்பட உள்ளது.
அடிக்கல் நாட்டினார்
இதற்கான பணிகளை தொடங்கும் விதமாக, அங்கு அடிக்கல் நாட்டும் விழா நேற்று நடைபெற்றது. இதற்கு மாவட்ட கலெக்டர் அருண் தம்புராஜ் தலைமை தாங்கினார். அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு, அடிக்கல் நாட்டி, கட்டுமான பணியை தொடங்கி வைத்தார்.
தொடர்ந்து, அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் பேசியதாவது:-
ரூ.15 கோடி செலவில் கட்டப்படும் இந்த புதிய பஸ்நிலையத்துக்கும் பழைய பஸ் நிலையத்துக்கும் 3½ கி.மீ. தூரம் உள்ளது. இந்த பஸ் நிலையம் பயன்பாட்டிற்கு வரும்போது பழைய பஸ் நிலையத்திற்கு தேவைக்கேற்ப நகர பேருந்துகள் இயக்கப்படும்.
காய்கறி மாா்க்கெட்
இதுதவிர சிதம்பரம் தில்லையம்மன் ஓடையில் இருந்து 40 கோடி ரூபாய் செலவில் சர்வீஸ் ரோடு அமைக்கப்பட உள்ளது. சிதம்பரத்தில் 5 கோடியே 50 லட்சம் ரூபாய் செலவில் காய்கறி மார்க்கெட் கட்டப்பட்டு 2 மாதங்களில் பயன்பாட்டிற்கு வரவுள்ளது.
மேலும், சிதம்பரம் நகரில் 7 கோடி ரூபாய் செலவில் 7 குளங்கள் தூர் வாரப்பட்டுள்ளது. மேலும், தற்போது பயன்பாட்டில் உள்ள பஸ் நிலையம் 5 கோடி ரூபாய் செலவில் புனரமைக்கப்பட உள்ளது.
இவ்வாறு அவர் பேசினார்.
அமைச்சர் ஆய்வு
முன்னதாக சிதம்பரம் நகரில் தூர்வாரப்பட்டு வரும் ஞானப்பிரகாச குளத்தை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் பார்வையிட்டார். மேலும், கனகசபை நகரில் கட்டப்பட்டு வரும் அறிவு சார் மையம், சிதம்பரம் உழவர் சந்தை இருந்த பகுதியில் காய்கறி மார்க்கெட் கட்டும் பணிகளையும் அவர் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது, அதிகாரிகளிடம் பணிகளை விரைந்து முடிக்குமாறு அறிவுறுத்தினார்.
நிகழ்ச்சியில் சிதம்பரம் நகர மன்ற தலைவர் செந்தில்குமார், நகராட்சி ஆணையர் பிரபாகரன், பொறியாளர் மகாராஜன், நகர மன்ற துணைத் தலைவர் முத்துக்குமரன், சிதம்பரம் நகர துணை செயலாளர் பாலசுப்பிரமணியன், சிதம்பரம் உதவி கலெக்டர் சுவேதா சுமன், தாசில்தார் செல்வகுமார், நகர மன்ற கொறடா ஜேம்ஸ் விஜயராகவன், கவுன்சிலர்கள் அப்பு சந்திரசேகரன் ,மணிகண்டன், ரமேஷ், வெங்கடேசன், புவனகிரி தி.மு.க. கிழக்கு ஒன்றிய செயலாளர் டாக்டர் மனோகர், தெற்கு ஒன்றிய செயலாளர் கலையரசன், ஊராட்சி மன்ற தலைவர் கோமதி சேகர் உள்பட அரசு அதிகாரிகள், மக்கள் பிரதிநிதிகள் தி.மு.க. நிர்வாகிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
பஸ் நிலையத்தில் வசதிகள்
சிதம்பரம் புதிய பஸ் நிலையமானது, 50 பஸ்கள் நிறுத்தும் வகையில் கட்டப்பட உள்ளது. அதோடு பஸ் நிலையத்துக்குள் 52 கடைகள், 1 உணவகம், அரசு போக்குவரத்து கழக முன்பதிவு மையம், நேரக் காப்பாளர் அறை, கண்காணிப்பு அறை, ஏ.டி.எம். மையம், குடிநீர் மற்றும் கழிவறை உள்ளிட்ட பல்வேறு வசதிகளுடன் அமைய இருப்பதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.






