காரைக்காலில் இருந்து காரைக்குடி வழியாக மதுரைக்கு புதிய ரெயில் தொழில் வணிக கழகத்தினர் கோரிக்கை
காரைக்காலில் இருந்து காரைக்குடி வழியாக மதுரைக்கு புதிய ரெயிலை இயக்க வேண்டும் என்று தொழில் வணிக கழகத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
காரைக்குடி
புதிய ரெயில்
காரைக்குடி தொழில் வணிக கழக தலைவர் சாமிதிராவிடமணி மற்றும் செயலாளர் எஸ்.கண்ணப்பன் ஆகியோர் மத்திய ரெயில்வே துறை மந்திரி அஸ்வின் வைஷ்ணவ்க்கு அனுப்பிய கோரிக்கை மனுவில் கூறியுள்ளதாவது:- தமிழகத்தின் தென்கிழக்கு பகுதியில் உள்ள சாதாரண சிறு, குறு வியாபாரிகளுக்கும் கட்டிட கட்டுமான தொழில் செய்வோருக்கும், சிற்றூர், பேரூர், நகரங்களில் சாலையோரம் மற்றும் நகரங்களில் உள்ள வியாபாரிகளுக்கும் அனைத்து பொருட்களையும் கொள்முதல் செய்ய செல்ல வேண்டிய நகரமாக மதுரை உள்ளது. இதுதவிர மேல்படிப்பிற்கும், மருத்துவ சிகிச்சைக்கும், நீதிமன்ற வழக்குகளுக்கும் உயர்நீதி மன்றம் மற்றும் கேரளா, கோவை, நாகர்கோவில் பகுதிகளுக்கு ரெயில் பயணம் செய்பவர்கள் மதுரை சென்றுதான் மேற்கண்ட இடங்களுக்கு செல்ல வேண்டியது உள்ளது. மேலும் மத்திய அரசின் எய்ம்ஸ் மருத்துவமனை, விமான நிலையம் செல்வோரும் ரெயிலைதான் பயன்படுத்தும் நிலை உள்ளது.
பயணிகளுக்கு பலன்
இவ்வாறு பல்வேறு பகுதிகளுக்கு செல்லும் பயணிகளுக்கு காரைக்குடி வழியாக போதிய ரெயில் வசதிகள் இதுவரை இல்லை. எனவே காரைக்கால், நாகூர், நாகப்பட்டினம், திருவாரூர், திருத்துறைப்பூண்டி, பட்டுக்கோட்டை, காரைக்குடி, சிவகங்கை, மானாமதுரை வழியில் மதுரைக்கு புதிய ரெயில் அதிகாலை 5 மணிக்கு புறப்பட்டு மதியம் 11.30 மணிக்கு மதுரை சென்றடையவும், மறுமார்க்கமாக மதுரையில் இருந்து மாலை 4.30 மணிக்கு புறப்பட்டு இரவு 11.50 மணிக்கு காரைக்கால் செல்லும்படியும் புதிய ரெயிலை இயக்கினால் பயணிகளுக்கு வசதியாக இருக்கும்.
இந்த ரெயில் முத்துப்பேட்டை, அதிராம்பட்டணம், தில்லைவிளாகம், பேராவூரணி, அறந்தாங்கி, புதுவயல் கண்டனூர், தேவகோட்டை ரஸ்தா, கல்லல் ஆகிய பகுதியில் நின்று செல்லும் வகையிலும் ஏற்பாடு செய்ய வேண்டும். இவ்வாறு புதிய ரெயில் இயக்கப்பட்டால் தென் பகுதியை சேர்ந்த அனைத்து தரப்பு மக்களும் பயனடைவார்கள்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.