நெல் கொள்முதல் நிலையம் அமைக்க வேண்டும்


நெல் கொள்முதல் நிலையம் அமைக்க வேண்டும்
x
தினத்தந்தி 7 March 2023 6:45 PM GMT (Updated: 7 March 2023 6:45 PM GMT)

கம்பம் பகுதியில் நெல் கொள்முதல் நிலையம் அமைக்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தேனி

கம்பம் பள்ளத்தாக்கு பகுதியான லோயர்கேம்ப் முதல் பழனிசெட்டிபட்டி வரை ஆண்டு தோறும் சுமார் 14 ஆயிரத்து 707 ஏக்கர் பரப்பில் இருபோக நெல் சாகுபடி செய்யப்பட்டு வருகிறது. கடந்த ஆண்டு பருவமழை கை கொடுத்ததால் முதல்போக சாகுபடி முடிவடைந்தது. இரண்டாம் போக சாகுபடி கடந்த டிசம்பர் மாதம் தொடங்கியது. தற்போது கம்பம், சுருளிப்பட்டி, நாரயணத்தேவன்பட்டி, கருநாக்கமுத்தன்பட்டி, மஞ்சள்குளம், ஆங்கூர்பாளையம், சாமாண்டிபுரம், அண்ணாபுரம் உள்ளிட்ட பகுதிகளில் நெல் அறுவடை செய்யும் பணியில் விவசாயிகள் தீவிரம் காட்டி வருகிறனர். ஆனால் இதுவரை கம்பம் பகுதியில் அரசு நெல் கொள்முதல் நிலையம் அமைக்கவில்லை. இதனை சாதகமாக பயன்படுத்திக் கொண்ட வியாபாரிகள் விவசாயிகளை சந்தித்து 62 கிலோ எடை கொண்ட நெல் மூடை ரூ.1,000 முதல் ரூ.1,100 வரை கொள்முதல் செய்து வருகின்றனர். மேலும் கொள்முதல் செய்த நெல்லிற்கான பணத்தினை வியாபாரிகள் உடனடியாக தருவதில்லை என்று கூறப்படுகிறது.

இதுகுறித்து விவசாயிகளிடம் கேட்டபோது, முதல்போக நெல் சாகுபடியை காட்டிலும், இரண்டாம் போக நெல் சாகுபடியில் நெல் மகசூல் 50 சதவீதம் தான் கிடைத்துள்ளது. உரம், பூச்சிமருந்து விலை பல மடங்கு உயர்ந்துள்ளது. மேலும் இந்த பகுதியில் அரசு நெல் கொள்முதல் நிலையம் அமைக்கப்படாததால் வேறு வழியின்றி வியாபாரிகளிடம் செல்ல வேண்டிய சூழ்நிலை உள்ளது. அதே சமயம் நெல்லை அரசே கொள்முதல் செய்தால் நல்ல விலை மற்றும் பணம் வங்கி கணக்கில் காலதாமதமின்றி கிடைக்கும். எனவே காலதாமதமின்றி அரசு கொள்முதல் நிலையம் தொடங்க வேண்டும் என்றனர்.


Next Story