வன விலங்குகளிடம் இருந்து பயிர்களை பாதுகாக்க நிரந்தர தீர்வு வேண்டும்


வன விலங்குகளிடம் இருந்து பயிர்களை பாதுகாக்க நிரந்தர தீர்வு வேண்டும்
x

இரவு முழுவதும் நாங்கள் காவல் காத்தும் பலனில்லாத நிலையே உள்ளதால், வன விலங்குகளிடம் இருந்து பயிர்களை பாதுகாக்க நிரந்தர தீர்வு ஏற்படுத்தி தர வேண்டும் என பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் விவசாயிகள் மனு கொடுத்தனர்.

பெரம்பலூர்

குறைதீர்க்கும் நாள் கூட்டம்

பெரம்பலூர் மாவட்ட பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடந்தது. கூட்டத்திற்கு மாவட்ட வருவாய் அலுவலர் வடிவேல் பிரபு தலைமை தாங்கி பொதுமக்களிடம் இருந்து கோரிக்கை மனுக்களை பெற்றார். அப்போது குன்னம் தாலுகா, பேரளி கிராமத்தை சேர்ந்த விவசாயிகள் வந்து மாவட்ட வருவாய் அலுவலரிடம் கொடுத்த மனுவில், எங்களது விவசாய நிலங்கள் வனத்துறைக்கு சொந்தமான சித்தளி காப்பு காட்டு அருகே உள்ளது. இதனால் வன காப்பு காட்டில் உள்ள மான்கள், காட்டு பன்றிகள் நிலங்களில் புகுந்து பயிரிடும் பயிர்களை சேதப்படுத்துவது வழக்கம். வன விலங்குகளின் தொந்தரவுகளை கட்டுப்படுத்த கோரி சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு பலமுறை நாங்கள் புகார் தெரிவித்தும் அவர்கள் நடவடிக்கை எடுக்கவில்லை.

மான்-காட்டு பன்றிகள்

இதனால் கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு வனக்காப்பு காட்டின் எல்லையை ஓட்டியே நாங்களே சுமார் ரூ.15 லட்சம் செலவில் 2 கிலோ மீட்டர் தொலைவிற்கு கம்பி வேலி அமைத்தோம். ஆனாலும் அந்த கம்பி வேலியை மான்கள் தாண்டி வந்தும், கம்பி வேலியின் அடியில் காட்டு பன்றிகள் புகுந்து வந்தும் நிலங்களில் பயிரிடும் பயிர்களை சேதப்படுத்துகின்றன. இந்த நிலையில் கடந்த ஆகஸ்டு மாதம் பயிரிட்ட மக்காச்சோளத்தை காட்டு பன்றிகளும், மான்களும் சேதப்படுத்தி வருகின்றன. இரவு முழுவதும் நாங்கள் காவல் காத்து நின்றாலும் பாதிப்பை தடுக்க முடியவில்லை.

இதனால் ஓரு ஏக்கருக்கு ரூ.20 ஆயிரத்துக்கு மேல் செலவு செய்தும் ஒரு மூட்டை மக்காச்சோளம் கூட கிடைக்குமா? என்று தெரியவில்லை. இதே நிலை நீடித்தால் நாங்கள் விவசாயத்தை கைவிட்டு வேறு வேலைக்கு செல்ல நேரிடும். எனவே வனத்துறையும், மாவட்ட நிர்வாகமும் வன விலங்குகளால் பாதிக்கப்பட்டுள்ள எங்களது விவசாய நிலங்களை நேரில் பார்வையிட்டு கணக்கிட்டு இழப்பீடு தொகையாக ஏக்கருக்கு ரூ.25 ஆயிரம் பெற்று தரவும், பயிர் காப்பீட்டு தொகையை பெற்று தரவும் நடவடிக்கை எடுக்க வேண்டும். வன விலங்குகளிடம் இருந்து பயிர்களை பாதுகாக்க நிரந்தர தீர்வை ஏற்படுத்துவதற்கான வழிமுறைகளை ஆய்வு செய்து விரைந்து அதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும், என்று கூறியிருந்தனர்.

தீபாவளி போனஸ்

தமிழ்நாடு எச்.எம்.எஸ். (ஹிந்த் மஸ்தூர் சபா) கட்டுமானம் அமைப்பு சாரா தொழிலாளர் பேரவையின் மாவட்ட கண்காணிப்பு குழு உறுப்பினர் பரஞ்ஜோதி தலைமையில், அப்பேரவையினர் கொடுத்த மனுவில், தொழிலாளர் நல வாரியத்தில் பதிவு பெற்ற அனைத்து தொழிலாளர்களுக்கும் தீபாவளி போனஸ் ஆக ரூ.7 ஆயிரம் வழங்க வேண்டும். வீடு கட்ட மானியம் பெற எளிய நடைமுறை வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்ற தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வலியுறுத்த வேண்டும், என்று கூறியிருந்தனர்.

வேப்பூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட வடக்கலூர் கிராம ஊராட்சியை சேர்ந்த பொதுமக்கள் சார்பில் கொடுக்கப்பட்ட மனுவில், வடக்கலூரில் உள்ள விளையாட்டு மைதானத்தை சீரமைக்க வேண்டும். வடக்கலூர் கிராம ஊராட்சியிலல் கடந்த 3 மாதங்களுக்கான வரவு-செலவு கணக்குகளை பதிவு செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும், என்று கூறியிருந்தனர். ஆலத்தூர் ஒன்றியம், பாடாலூர் ஊராட்சிக்குட்பட்ட ஊத்தங்கால் கிராமத்தை சேர்ந்த பொதுமக்கள் சார்பில் கொடுத்த மனுவில், எங்கள் கிராமத்தை சேர்ந்த 47 பேருக்கு இலவச வீட்டுமனைக்கு பட்டா கொளக்காநத்தத்தில் கொடுக்கப்பட்டுள்ளது. எங்களுக்கு எங்கள் ஊரிலேயே இடம் காட்ட வேண்டும். இல்லையென்றால் நாங்கள் குடியிருக்கும் இடத்திற்கு பட்டா வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும், என்று கூறியிருந்தனர்.

கூட்டத்தில் பொதுமக்களிடம் இருந்து பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய மொத்தம் 423 மனுக்கள் பெறப்பட்டன.


Next Story