அளவுக்கு அதிகமாக பட்டாசு வைத்திருந்தவர் கைது
திருக்கோவிலூர் அருகே அளவுக்கு அதிகமாக பட்டாசு வைத்திருந்தவரை கைது செய்த போலீசார் குடோனுக்கு சீல் வைத்தனர்.
திருக்கோவிலூர்
திருக்கோவிலூர் அருகே உள்ள மணலூர்பேட்டை நாட்டார் தெருவை சேர்ந்த சக்கரவர்த்தி மகன் முருகன் அரசு உரிமம் பெற்று பட்டாசு தயாரிக்கும் தொழிலில் ஈடுபட்டு வருகிறார். இவரது குடோனில் பட்டாசு மற்றும் இதை தயாரிப்பதற்கு தேவையான வெடிமருந்து பொருட்களை அதிக அளவில் இருப்பில் வைத்துள்ளதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மோகன்ராஜூ உத்தரவின் பேரில் திருக்கோவிலூர் துணை போலீஸ் சூப்பிரண்டு மனோஜ்குமார், மணலூர்பேட்டை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சதீஷ்குமார் மற்றும் போலீசார், தாசில்தார் பசுபதி ஆகியோர் விரைந்து சென்று முருகனுக்கு சொந்தமான வெடிமருந்து குடோனில் திடீர் சோதனை மேற்கொண்டனர். அப்போது குடோனுக்குள் அளவுக்கு அதிகமான வெடிமருந்து மற்றும் பட்டாசுகள் இருந்ததை அதிகாரிகள் கண்டுபிடித்தனர். இது குறித்து கிராம நிர்வாக அலுவலர் ராஜ்குமார் கொடுத்த புகாரின் பேரில் முருகனை போலீசார் கைது செய்தனர். மேலும் அவரது குடோனையும் பூட்டி சீல் வைத்தனர். இந்த சம்பவம் மணலூர்பேட்டை பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.