மோட்டார் சைக்கிள்கள் மோதி சாலையில் விழுந்த பிளஸ்-2 மாணவர், பஸ் சக்கரத்தில் சிக்கி பலி


மோட்டார் சைக்கிள்கள் மோதி சாலையில் விழுந்த பிளஸ்-2 மாணவர், பஸ் சக்கரத்தில் சிக்கி பலி
x

உசிலம்பட்டியில் மோட்டார் சைக்கிள்கள் மோதி சாலையில் விழுந்த பிளஸ்-2 மாணவர், பஸ் சக்கரத்தில் சிக்கி பலியானார்.

மதுரை

உசிலம்பட்டி,

பிளஸ்-2 மாணவர்

உசிலம்பட்டி அருகே பெரியசெம்மேட்டுப்பட்டியைச் சேர்ந்தவர் அழகுராஜா. இவருடைய மகன் ரூபன் (வயது 17). இவர் உசிலம்பட்டியில் உள்ள ஒரு பள்ளியில் பிளஸ்-2 படித்து வந்தார். இவர் தந்தை அழகுராஜா கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு விபத்தில் உயிரிழந்தார்.

இதை தொடர்ந்து குடும்ப வறுமையின் காரணமாக காலை, மாலை நேரங்களில் பால் கறவை பணி செய்து குடும்பத்தை வழிநடத்தியதோடு, பள்ளிக்கும் சென்று வந்தார்.

இந்நிலையில் நேற்று காலை பால் கறவை பணி செய்துவிட்டு பாலை உசிலம்பட்டியில் உள்ள பண்ணையில் ஊற்றுவதற்காக பெரியசெம்மேட்டுப்பட்டியில் இருந்து உசிலம்பட்டி நோக்கி மோட்டார் சைக்கிளில் சென்றார்.

பஸ் சக்கரத்தில் சிக்கி...

கொக்குடையான்பட்டி என்னும் இடத்தில் அரசு பஸ்சை முந்தி செல்ல முயன்ற போது எதிரே வந்த மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் மோட்டார் சைக்கிளுடன் ரூபன் கீழே விழுந்தார். அப்போது கண் இமைக்கும் நேரத்தில் பின்னால் வந்த பஸ் ரூபன் மீதும் மோட்டார் சைக்கிள் மீதும் ஏறியது.

இந்த விபத்தில் ரூபனும், எதிரே மோட்டார் சைக்கிளில் வந்த எழுமலையைச் சேர்ந்த விஷ்ணுவும் (22) படுகாயம் அடைந்தனர். இருவரையும் அக்கம் பக்கத்தினர் மீட்டு உசிலம்பட்டி அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அங்கு அரசு மருத்துவமனையில் ரூபன் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். மேலும் விஷ்ணுவிற்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இது குறித்து தகவல் அறிந்து விரைந்து வந்த உசிலம்பட்டி நகர் போலீசார் ரூபனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

அடுத்த வாரம் அவரது அக்காளுக்கு திருமண ஏற்பாடுகள் நடந்து வந்த நிலையில் விபத்தில் ரூபன் பலியானது அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.


Related Tags :
Next Story