லாரி மோதி போலீஸ் ஏட்டு பலி


லாரி மோதி போலீஸ் ஏட்டு பலி
x
தினத்தந்தி 14 Oct 2023 1:00 AM IST (Updated: 14 Oct 2023 1:01 AM IST)
t-max-icont-min-icon

பந்தலூர் அருகே, மோட்டார் சைக்கிளில் சென்றபோது லாரி மோதி போலீஸ் ஏட்டு பலியானார்.

நீலகிரி

பந்தலூர் அருகே, மோட்டார் சைக்கிளில் சென்றபோது லாரி மோதி போலீஸ் ஏட்டு பலியானார்.

போலீஸ் ஏட்டு

நீலகிரி மாவட்டம் பந்தலூர் தாலுகா அய்யன்கொல்லி அருகே படிச்சேரி பழங்குடியின கிராமத்தை சேர்ந்தவர் சதீஷ்(வயது 45). சேரம்பாடி போலீஸ் நிலையத்தில் தலைமை காவலராக(ஏட்டு) பணியாற்றி வந்தார். இவருடைய மனைவி அனிஷிதா. இவர்களுக்கு 3 குழந்தைகளும் உள்ளனர்.

அனிஷிதா, அருகில் உள்ள கேரள மாநிலம் வயநாடு மாவட்டம் சுள்ளியோடு பகுதியில் செயல்படும் ஒரு பள்ளியில் ஆசிரியையாக வேலை பார்த்து வருகிறார். இதன் காரணமாக அங்குள்ள வாடகை வீட்டில் மனைவி மற்றும் குழந்தைகளுடன் சதீஷ் குடியேறினார். மேலும் அங்கிருந்துதான் தினமும் சேரம்பாடிக்கு மோட்டார் சைக்கிளில் வந்து செல்வார்.

டிரைவர் கைது

இந்த நிலையில் சதீஷ் நேற்று காலையில் சுள்ளியோட்டில் இருந்து சேரம்பாடிக்கு மோட்டார் சைக்கிளில் புறப்பட்டார். கப்பாலா ஆரம்ப சுகாதார நிலையம் அருகே சென்றபோது, எதிரே மினி பஸ்சை முந்தி வந்த லாரி ஒன்று, திடீரென மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்டு அவர் படுகாயம் அடைந்தார். அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு சுல்தான்பத்தேரியில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் செல்லும் வழியிலேயே சதீஷ் பரிதாபமாக உயிரிழந்தார். இந்த விபத்து குறித்து எருமாடு போலீசார் வழக்குப்பதிவு செய்து, விபத்தை ஏற்படுத்திய லாரியை பறிமுதல் செய்தனர். மேலும் லாரியை ஓட்டி வந்த சேரம்பாடியை சேர்ந்த சரண்ராஜ்(34) என்பவரை கைது செய்தனர்.


Next Story