புதுக்கோட்டையில் போலீசார் பிடியில் இருந்து தப்பியோட முயன்ற கைதியின் கால் முறிந்தது
புதுக்கோட்டையில் போலீசார் பிடியில் இருந்து தப்பியோட முயன்ற கைதி கீழே விழுந்ததில் அவரது கால் முறிந்தது.
கொலை முயற்சி வழக்கில் கைது
புதுக்கோட்டை அடப்பன்வயலை சோ்ந்தவர் கார்த்தி என்கிற ஒச்சி கார்த்தி (வயது 24). இவர் மீது கொலை, கொலை முயற்சி, வழிப்பறி உள்ளிட்ட வழக்குகள் உள்ளதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு அடப்பன்வயலை சேர்ந்த சீனிவாசன் என்பவரை முன்விரோதம் காரணமாக கார்த்தி அரிவாளால் வெட்டினார். இதில் பலத்த காயமடைந்த அவர் சிகிச்சைக்காக புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இந்த சம்பவம் தொடர்பாக திருக்கோகர்ணம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். மேலும் கார்த்தியை நேற்று முன்தினம் போலீசார் கைது செய்தனர்.
தப்பியோட முயற்சி
இந்த நிலையில் கைதான கார்த்தியை சிறையில் அடைப்பதற்கு முன்பு மருத்துவ பரிசோதனைக்காக போலீஸ் ஜீப்பில் இன்ஸ்பெக்டர் செல்லதுரை தலைமையிலான போலீசார் புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். அப்போது சிப்காட்டில் இருந்து புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு செல்லக்கூடிய தஞ்சாவூர் சாலையில் இடையப்பட்டி எனும் இடத்தின் அருகே சென்றபோது, கார்த்தி சிறுநீர் கழிக்க வேண்டும் என போலீசாரிடம் கூறினார்.
இதையடுத்து போலீசார் ஜீப்பை சாலையோரம் நிறுத்தி விட்டு அவரை இறங்க வைத்தனர். போலீசாரும் பாதுகாப்பிற்காக நின்றிருந்தனர். அந்த நேரத்தில் திடீரென கார்த்தி தப்பியோட முயற்சித்தார். அவர் சிறிது தூரம் தப்பியோடிய நிலையில் தரையில் கீழே விழுந்தார். இதில் அவருக்கு இடது கால் முறிந்தது. இதனால் அவரால் அங்கிருந்து ஓட முடியவில்லை.
இதற்கிடையில் போலீசார் அவரை விரட்டி பிடித்தனர். கால் முறிவு ஏற்பட்ட கார்த்தியை சிகிச்சைக்காக புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.