கோலாகலமாக நடந்த விநாயகர் சிலைகள் ஊர்வலம் கருங்கல்பாளையம் காவிரி ஆற்றில் கரைப்பு
கோலாகலமாக விநாயகர் சிலைகள் ஊர்வலம் நடந்தது. கருங்கல்பாளையம் காவிரி ஆற்றில் கரைக்கப்பட்டன.
ஈரோட்டில் நேற்று கோலாகலமாக விநாயகர் சிலைகள் ஊர்வலம் நடைபெற்றது. பின்னர் சிலைகள் கருங்கல்பாளையம் காவிரி ஆற்றில் கரைக்கப்பட்டன.
விநாயகர் சதுர்த்தி
விநாயகர் சதுர்த்தி விழா கடந்த 18-ந் தேதி கொண்டாடப்பட்டது. இதையொட்டி இந்து முன்னணி சார்பில் ஈரோடு மாவட்டத்தில் 1,000-க்கும் மேற்பட்ட இடங்களில் விநாயகர் சிலைகள் அமைக்கப்பட்டு சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டன. மாவட்டத்தில் ஆங்காங்கே சிலைகள் கரைப்பு ஊர்வலம் தொடர்ச்சியாக நடந்து வருகிறது.
அதன்படி ஈரோடு மாநகர் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் அமைக்கப்பட்டு இருந்த சிலைகள் காவிரி ஆற்றில் கரைக்கும் நிகழ்ச்சி நேற்று நடந்தது. இதற்காக மாநகரின் அனைத்து பகுதிகளில் இருந்தும் நேற்று மதியம் 2 மணிக்கு விநாயகர் சிலைகள் சம்பத்நகர் பகுதிக்கு கொண்டு வரப்பட்டன.
ஊர்வலம்
ஈரோடு சம்பத்நகரில் மூல விநாயகராக பிரமாண்ட வீரவிநாயகர் சிலை அமைக்கப்பட்டு இருந்தது. அனைத்து சிலைகளும் சம்பத்நகர் பகுதிக்கு கொண்டு வரப்பட்டதும் ஊர்வலத்துக்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டன. வீரவிநாயகர் சிலைக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு வாகனத்தில் எடுத்து வைக்கப்பட்டது. தொடர்ந்து ஊர்வலம் தொடங்கியது.
இந்து முன்னணி மாவட்ட தலைவர் ப.ஜெகதீசன் தலைமை தாங்கினார். மாநில பொதுச்செயலாளர் ஜெ.எஸ்.கிஷோர்குமார், மாவட்ட பொதுச்செயலாளர் ப.சக்திமுருகேஷ், பொருளாளர் கு.கோவிந்தராஜ், செயலாளர் க.கார்த்தி ஆகியோர் முன்னிலை வகித்தனர். இந்து முன்னணி மாநில செயலாளர் கா.குற்றாலநாதன், மாநில துணைத்தலைவர் நா.சண்முகசுந்தரம் ஆகியோர் பேசினார்கள். நிகழ்ச்சியில் டாக்டர் சி.சரஸ்வதி எம்.எல்.ஏ., எஸ்.செல்வராஜ், ஏ.செந்தில்குமார் உள்பட பலர் கலந்து கொண்டனர். ஜி.விவேகானந்தன் ஊர்வலத்தை கொடி அசைத்து தொடங்கி வைத்தார்.
முளைப்பாரி
சம்பத்நகரில் வைக்கப்பட்டு இருந்த மூல விநாயகர் சிலையுடன் ரூபாய் நோட்டுகள், வண்ண மாலைகள், தோரணங்களால் அலங்காரம் செய்யப்பட்ட சிலைகள் ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டன. முளைப்பாரிகளுடன் பெண்கள் நடந்து சென்றனர். சிலைகளை கொண்டு சென்ற வாகனங்களின் முன்னும் பின்னும் அந்தந்த பகுதியை சேர்ந்த இளைஞர்கள், சிறுவர்கள் உற்சாக நடனம் ஆடிக்கொண்டு சென்றனர். வண்ண மயமான புகை வாணங்களை பற்ற வைத்தும், பூக்கள் சொரிந்துகொண்டும் சென்றனர்.
சம்பத்நகரில் தொடங்கிய ஊர்வலம் பெரியவலசு, முனிசிபல் காலனி ரோடு, மேட்டூர் ரோடு, அரசு ஆஸ்பத்திரி ரவுண்டானா, மீனாட்சி சுந்தரனார் ரோடு (பிரப் ரோடு), காமராஜ் வீதி, ஈஸ்வரன் கோவில் வீதி, மணிக்கூண்டு, ஆர்.கே.வி. ரோடு, காவிரி ரோடு வழியாக கருங்கல்பாளையம் காவிரிக்கரையை சென்று அடைந்தது.
காவிரியில் கரைப்பு
ஊர்வலம் சென்ற வழி நெடுகிலும் ஏராளமான பொதுமக்கள் கூடி நின்று சிலைகளுக்கு வரவேற்பு அளித்தனர். கோலாகலமாக நடந்த ஊர்வலம் காவிரிக்கரையில் நிறைவடைந்தது.
அங்கு, பூஜை செய்யப்பட்டு ஒவ்வொரு சிலையாக காவிரி ஆற்றில் கரைக்கப்பட்டது. மொத்தம் 159 சிலைகள் கரைக்கப்பட்டன. நள்ளிரவை தாண்டியும் சிலைகள் கரைக்கப்பட்டன.
450 போலீசார்
ஊர்வலத்தையொட்டி ஈரோடு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜி.ஜவகர் தலைமையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது. சிலைகளுக்கு தலா ஒரு போலீஸ் வீதம் பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். வழி நெடுகிலும் போலீசார் பணியில் இருந்தனர்.
ஈரோடு மாவட்ட கூடுதல் போலீஸ் சூப்பிரண்டுகள் பாலமுருகன், துணை போலீஸ் சூப்பிரண்டுகள் வி.ஆறுமுகம் (ஈரோடு டவுன்), அமிர்தவர்ஷினி (பவானி), சேகர் (குற்ற ஆவண காப்பகம்) இன்ஸ்பெக்டர் சோமசுந்தரம், ராஜாபிரபு, நிர்மலா உள்பட 450 போலீசார் மற்றும் ஊர்க்காவல் படையினர், தீயணைப்பு படையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.