ஓய்வுபெற்ற போலீஸ் அதிகாரி வீட்டில் ரூ.1¼ லட்சம் நகைகள் கொள்ளை

செஞ்சி அருகே ஓய்வுபெற்ற போலீஸ் அதிகாரி வீட்டில் புகுந்து ரூ.1¼ லட்சம் மதிப்புள்ள நகைகளை கொள்ளையடித்துச்சென்ற மர்மநபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகிறாா்கள்
செஞ்சி
ஓய்வுபெற்ற போலீஸ் அதிகாரி
செஞ்சி அருகே உள்ள ரெட்டிபாளையம் கிராமத்தை சேர்ந்தவர் வஜ்ரவேலு. சென்னையில் போலீஸ் இன்ஸ்பெக்டராக பணிபுரிந்து ஓய்வுபெற்ற இவர் அங்கேயே தங்கி இருந்து வருகிறார். வஜ்ரவேலுக்கு சொந்தமான வீடு ரெட்டிபாளையத்தில் உள்ளது. ஊருக்கு வந்தால் இங்கு தங்குவது வழக்கம்.
இந்நிலையில் கடந்த 17-ந் தேதி இரவு வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு இருந்ததை பார்த்து அவரது உறவினர்கள் வஜ்ரவேலுவுக்கு தகவல் தெரிவித்தனர். ஆனால் அவர் இருதய அறுவை சிகிச்சை செய்து கொண்டு ஆஸ்பத்திரியில் இருப்பதால் வீட்டிலிருந்த பொருட்களின் விவரம் குறித்து உறவினர்களிடம் செல்போனில் தெரிவித்தார்.
நகைகள் கொள்ளை
உடனே அவர்கள் வீட்டுக்குள் சென்று பார்த்தபோது உள்ளே அறையில் இருந்த குத்துவிளக்கு, 2 கிலோ 400 கிராம் எடையுள்ள வெள்ளி பொருட்கள், 10 கிராம் தங்க தாமரை மொட்டு, 15 பட்டு புடவைகள் ஆகியவை திருடு போனது தெரிய வந்தது. இதன் மதிப்பு சுமார் ரூ.1¼ லட்சம் இருக்கும் என கூறப்படுகிறது.
இது குறித்து வஜ்ரவேலுவின் உறவினர் ரவிவர்மன் கொடுத்த புகாரின் பேரில் சத்தியமங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து நகைகளை கொள்ளையடித்து சென்ற மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகிறார்கள். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.






