அலுவலகத்தை இடமாற்றம் செய்ய எதிர்ப்பு தெரிவித்து கடையடைப்பு-ஆர்ப்பாட்டம்


அலுவலகத்தை இடமாற்றம் செய்ய எதிர்ப்பு தெரிவித்து கடையடைப்பு-ஆர்ப்பாட்டம்
x

உடையார்பாளையம் கல்வி மாவட்ட அலுவலகத்தை இடமாற்றம் செய்ய எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் கடையடைப்பு மற்றும் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

அரியலூர்

எதிர்ப்பு

அரியலூர் மாவட்டத்தில் கடந்த 25 ஆண்டுகளாக உடையார்பாளையம் கல்வி மாவட்டமாக இயங்கி வருகிறது. இந்நிலையில் உடையார்பாளையம் கல்வி மாவட்டத்தில் இயங்கி வரும் கல்வி அலுவலகத்தை அரியலூருக்கு இடம் மாற்றுவதாக தமிழக அரசு அறிவித்தது. இந்நிலையில் உடையார்பாளையம் தாலுகாவில் உள்ள கல்வி அலுவலகத்தை இடமாற்றம் செய்யக்கூடாது என தி.மு.க.வை தவிர மற்ற அனைத்து கட்சிகளின் பொறுப்பாளர்கள், அனைத்து கடை வியாபாரிகள் மற்றும் பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்து கடையடைப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் உடையார்பாளையம் பழைய பஸ் நிலையத்தில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

இயல்பு வாழ்க்கை பாதிப்பு

300-க்கும் மேற்பட்ட வியாபாரிகள் இந்த கடையடைப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். அத்தியாவசிய பொருட்களை விற்பனை செய்யும் கடைகளை தவிர மற்ற கடைகள் அனைத்தும் மூடப்பட்டு இருந்தன. இதனால் உடையார்பாளையம் பகுதி மக்களின் இயல்பு வாழ்க்கை நேற்று பாதிக்கப்பட்டது. இந்த கடை அடைப்பு போராட்டத்திற்கு வணிக சங்கம் முழு ஆதரவு தெரிவித்துள்ளனர். இதுகுறித்து உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படாவிட்டால் அடுத்தகட்ட போராட்டம் நடத்துவதாக சமூக ஆர்வலர்கள், வியாபாரிகள், அனைத்து கட்சி பொறுப்பாளர்கள் மற்றும் பொதுமக்கள் தெரிவித்துள்ளனர்.


Next Story