போலீஸ் வாகனம் மோதி சிறுமி பலி; தாய் படுகாயம்


போலீஸ் வாகனம் மோதி சிறுமி பலி; தாய் படுகாயம்
x
தினத்தந்தி 5 July 2023 4:21 PM GMT (Updated: 6 July 2023 10:00 AM GMT)

திருப்பூர் நல்லூர் பகுதியில் போலீஸ் வாகனம் மோதி 7 வயது சிறுமி பரிதாபமாக பலியானாள். இதைக் கண்டித்து பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

திருப்பூர்

வீரபாண்டி

இந்த விபத்து குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-

சிறுமி

தஞ்சாவூரைச் சேர்ந்தவர் ஜெயராஜ் (வயது 42). இவர் வெளிநாட்டில் வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி ராஜேஸ்வரி (35). இவர்களது மகன் சஞ்சய் (17), மகள் திவ்யதர்ஷினி (7). அங்கு போதிய வேலை வாய்ப்பு இல்லாததால் ராஜேஸ்வரி தனது மகன் மற்றும் மகளுடன் கடந்த 5 ஆண்டுகளாக திருப்பூர் விஜயாபுரம் பகுதியில் வசித்து கொண்டு பனியன் நிறுவனத்தில் டெய்லராக வேலை பார்த்து வருகிறார். திவ்யதர்ஷினி அங்குள்ள அரசுப் பள்ளியில் 3-ம் வகுப்பு படித்து வந்தாள். இந்த நிலையில் நேற்று மாலை ராஜேஸ்வரி தனது மகள் திவ்யதர்ஷினியுடன் ஸ்கூட்டரில் விஜயாபுரத்தில் இருந்து திருப்பூர் நோக்கி வந்து கொண்டிருந்தார்.

போலீஸ் வாகனம் மோதியது

அவர்கள் திருப்பூர்-காங்கயம் சாலை நல்லூர் பகுதியில் வந்து கொண்டிருந்தனர். அப்போது பின்னால் அதிவேகமாக வந்த போலீஸ் வாகனம் ராஜேஸ்வரி ஓட்டிச்சென்ற ஸ்கூட்டர் மீது ேமாதியது. இந்த விபத்தில் ராஜேஸ்வரியும், அவருடைய மகளும் தூக்கி வீசப்பட்டனர். அப்போது அவர்கள் 2 பேர் மீதும் போலீஸ் வாகனத்தின் சக்கரம் ஏறி இறங்கியது. இதில் சம்பவ இடத்திலேயே சிறுமி திவ்யதர்ஷினி ரத்த வெள்ளத்தில் பலியானாள். ராஜேஸ்வரிக்கு பலத்த காயம் ஏற்பட்டது. அருகில் இருந்தவர்கள் உடனடியாக ராஜேஸ்வரியை மீட்டு அருகில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.

சாலை மறியல்

மேலும் விபத்தை ஏற்படுத்திய போலீஸ் வாகனத்தை ஓட்டி வந்த ஊர்க்காவல் படைைய சேர்ந்த காவலர் வீரச்சின்னன் (35) என்பவரை பொதுமக்கள் பிடித்து தாக்கினர்.

இதனிடையே விபத்தை ஏற்படுத்திய ஊர்க்காவல் படை காவலர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீஸ் துணை கமிஷனர் வனிதா, நல்லூர் உதவி கமிஷனர் நந்தினி மற்றும் போலீசார் மறியலில் ஈடுபட்ட பொது மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி அவர்களை கலைந்து செல்லும்படி அறிவுறுத்தினர்.

போக்குவரத்து பாதிப்பு

சாலை மறியல் காரணமாக திருப்பூர்-காங்கயம் சாலையின் இருபுறமும் வாகனங்கள் அணிவகுத்து நின்றன. சுமார் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. போலீசார் மாணவியின் உடலை மீட்டு திருப்பூர் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

இந்த விபத்து குறித்து நல்லூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.

போலீஸ் வாகனம் மோதி மாணவி பலியான சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.


Next Story