வனப்பகுதியை சுற்றி சோலார் மின்வேலி அமைக்க கோரிக்கை


வனப்பகுதியை சுற்றி சோலார் மின்வேலி அமைக்க கோரிக்கை
x

வனப்பகுதியை சுற்றி சோலார் மின்வேலி அமைக்க கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

திருச்சி

ஆலோசனை கூட்டம்

வன விலங்குகளால் விவசாயிகளுக்கு ஏற்படும் பிரச்சினைகள் மற்றும் அவற்றுக்கான தீர்வு குறித்த ஆலோசனை, குறை தீர்க்கும் கூட்டம் திருச்சி மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் வனத்துறை சார்பில் நேற்று காலை நடைபெற்றது. கூட்டத்துக்கு மாவட்ட வன அதிகாரி கிரண் தலைமை தாங்கினார். உதவி வன பாதுகாவலர்கள் சம்பத்குமார், சரவணகுமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் வனச்சரக அலுவலர்கள், வனக்காப்பாளர்கள், விவசாயிகள் பலர் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில் விவசாயிகள் பேசுகையில், வனப்பகுதிகளை ஒட்டியுள்ள விவசாய நிலங்களில் குரங்குகள், மான்கள், காட்டெருமைகள், காட்டுப்பன்றிகள், மயில்கள் உள்ளிட்டவையால் வேளாண் பயிர்களும் மற்றும் அறுவடைக்கு தயாராக உள்ள தானியங்கள், பழங்கள் உள்ளிட்டவையும் அதிகளவில் பாதிப்புக்கு உள்ளாகி வருகின்றன. இதனால் விவசாயிகளுக்கு பெருத்த நஷ்டம் ஏற்படுகிறது.

மின்வேலி அமைக்க வேண்டும்

எனவே வனவிலங்குகள் வெளியேறுவதை தடுக்க வனப்பகுதியை சுற்றி சோலார் மின்வேலி அமைக்க வேண்டும். வனவிலங்குகளால் சேதப்படுத்தப்பட்ட பயிர்களுக்கு கடந்த 2015-ம் ஆண்டில் இருந்து எந்த விவசாயிக்கும் இழப்பீடு வழங்கவில்லை. அவற்றுக்கு உரிய இழப்பீடு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். விவசாயிகள் அடங்கிய வனக்குழு அமைக்க வேண்டும் என்று வலியுறுத்தினர். அதற்கு வனத்துறை அதிகாரிகள், வன விலங்குகளால் விவசாயிகளும், வேளாண் பயிர்களும் பாதிக்கப்பட்டால் உரிய இழப்பீடு வழங்கப்படுகிறது. விரைவில் வனக்குழு புதிதாக அமைக்கப்படும் என்று கூறியதுடன், எவ்வாறு இழப்பீடு பெற விண்ணப்பிக்க வேண்டும் என்பது குறித்தும் விளக்கம் அளிக்கப்பட்டது. அத்துடன், இழப்பீடு பெறும் மாதிரிப் படிவங்களும் கூட்டத்துக்கு வந்திருந்த விவசாயிகள் மற்றும் விவசாய சங்க பிரதிநிதிகளுக்கு வழங்கப்பட்டன.


Next Story