புரட்டாசி கடைசி சனிக்கிழமையையொட்டி பெருமாள் கோவில்களில் சிறப்பு வழிபாடு


தினத்தந்தி 14 Oct 2023 9:30 PM GMT (Updated: 14 Oct 2023 9:30 PM GMT)

புரட்டாசி மாதத்தின் கடைசி சனிக்கிழமையான நேற்று பெருமாள் கோவில்களில் சிறப்பு வழிபாடு நடந்தது.

திண்டுக்கல்

புரட்டாசி மாதத்தின் கடைசி சனிக்கிழமையான நேற்று பெருமாள் கோவில்களில் சிறப்பு வழிபாடு நடந்தது.

சிறப்பு வழிபாடு

புரட்டாசி மாதத்தில் வரும் சனிக்கிழமை பெருமாளுக்கு விசேஷ நாளாகும். அன்றைய தினம் பக்கர்கள் அதிகாலையில் எழுந்து குளித்து பெருமாள் கோவிலுக்கு சென்று வழிபடுவது வழக்கம். அதன்படி புரட்டாசி மாதத்தின் கடைசி சனிக்கிழமை நேற்று ஆகும்.

இதையொட்டி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் உள்ள பெருமாள் கோவில்களில் சிறப்பு பூஜை மற்றும் வழிபாடு நடந்தது. இதையொட்டி திண்டுக்கல் மலையடிவாரம் சீனிவாச பெருமாள் கோவிலில் நடந்த சிறப்பு வழிபாட்டில் காலை 5 மணியளவில் திருப்பள்ளி எழுச்சி நடந்தது.

மேலும் சுவாமிக்கு பால், பழம், பன்னீர் உள்பட 16 வகையான சிறப்பு திருமஞ்சனம் செய்யப்பட்டு கத்தரிக்காய், வெண்டைக்காய் உள்பட பல்வேறு காய்கறிகளால் அலங்கரிக்கப்படும் காதம்பரி அலங்காரம் நடந்தது. கோவில் மண்டபத்தில் உற்சவர் ஸ்ரீதேவி, பூதேவி சமேத சீனிவாச பெருமாளுக்கு மலர் அலங்காரம், தீபாராதனை நடைபெற்றது.

தென் திருப்பதி வெங்கடாசலபதி

இதேபோல் திண்டுக்கல் நாகல்நகர் வரதராஜ பெருமாள் கோவிலில் காலை 6 மணியளவில் சுவாமி, தாயார் அம்பாள், ஆஞ்சநேயருக்கு சந்தனம், வாசனை திரவியங்கள் உள்ளிட்ட 16 வகையான சிறப்பு அபிஷேகம் நடந்தது. அதைத்தொடர்ந்து அனைத்து சாமிக்கும் கல்அங்கி சிறப்பு அலங்காரம், தீபாராதனை நடந்தது.

திண்டுக்கல் எம்.வி.எம்.நகர் தென் திருப்பதி வெங்கடாசலபதி கோவிலில் நேற்று முன்தினம் சுவாமி, அம்பாளுக்கு சிறப்பு திருமஞ்சனம் செய்யப்பட்டது. அதைத்தொடர்ந்து நேற்று காலையில் மூலவர் வெங்கடாசலபதிக்கு தங்க கவசம் அலங்காரம் மற்றும் பத்மாவதி தாயார், விநாயகர், சக்கரத்தாழ்வார், ஆஞ்சநேயர், லட்சுமி நரசிம்மர் ஆகிய சாமிகளுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது.

பழனி, வேம்பார்பட்டி

சாணார்பட்டி அருகே உள்ள வேம்பார்பட்டி வெங்கடேச பெருமாள் கோவிலில் பெருமாளுக்கு சிறப்பு அலங்காரம் மற்றும் அபிஷேகம் நடைபெற்றது. இதேபோல் வி.மேட்டுப்பட்டி கதிர்நரசிங்க பெருமாள், கோபால்பட்டி கிருஷ்ணன் கோவில் ஆகிய கோவில்களிலும் சிறப்பு வழிபாடு நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

இதேபோல் பழனி முருகன் கோவிலின் உபகோவிலான லட்சுமி நாராயண பெருமாள் கோவில், வேணுகோபால பெருமாள், பாலசமுத்திரம் அகோபில வரதராஜ பெருமாள், கொடைக்கானல் ரோட்டில் உள்ள கன்னடிய பெருமாள் கோவில், ராமநாதன்நகர் லட்சுமி-நரசிம்மர் கோவில் உள்பட அனைத்து பெருமாள் கோவில்களிலும் அதிகாலை முதலே பக்தர்கள் கூட்டம் அதிக அளவில் காணப்பட்டது. அந்த கோவில்களில் சுவாமிக்கு சிறப்பு பூஜைகள், அலங்காரங்கள், அபிஷேகங்கள் நடைபெற்றது. மேலும் பல இடங்களில் அன்னதானம் வழங்கப்பட்டது.

கொடைக்கானல் வரதராஜபெருமாள்

கொடைக்கானல் அண்ணாசாலையில் ஸ்ரீதேவி, பூதேவி சமேத வரதராஜ பெருமாள் கோவிலில் நேற்று அதிகாலை முதல் சிறப்பு பூஜை, அபிஷேகம் நடந்தது. ஐம்பொன் கவசம் அணிவிக்கப்பட்டு சுவாமி சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்தார். இதைத்தொடர்ந்து கோவில் கமிட்டி சார்பில், பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இதற்கு கோவில் கமிட்டி தலைவரும், முன்னாள் நகராட்சி தலைவருமான வி.எஸ்.கோவிந்தன் தலைமை தாங்கினார். செயலாளர் ராஜாராம், பொருளாளர் அங்கப்பன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

நகராட்சி தலைவர் செல்லத்துரை, துணைத்தலைவர் மாயக்கண்ணன் கவுன்சிலர் ஆண்டவர் அப்பாஸ் ஆகியோர் அன்னதானத்தை தொடங்கி வைத்தனர். மாலையில் அண்ணாசாலை, மாப்பிள்ளை முதலியார் தெரு ஆகிய இடங்களில் சுவாமி வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

பட்டிவீரன்பட்டியை அடுத்த சித்தரேவுவில் உள்ள ஸ்ரீதேவி, பூதேவி சமேத வரதராஜபெருமாள் கோவிலில் பெருமாளுக்கு 16 வகையான அபிஷேகம் நடந்தது. இதேபோல் அய்யம்பாளையம் லட்சுமி நாராயண பெருமாள் கோவிலிலும், பட்டிவீரன்பட்டி நரசிங்கபெருமாள் கோவிலிலும் பெருமாளுக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. விழாவில் கலந்து கொண்ட பக்தர்களுக்கு துளசி தீர்த்தம், பிரசாதம் வழங்கப்பட்டன.

வீடுகளில் பூஜை

புரட்டாசி விரதம் கடைபிடிக்கும் பக்தர்கள் பெருமாள் கோவில்களில் சாமி தரிசனம் செய்துவிட்டு, வீடுகளில் வெங்கடாசலபதி படத்துக்கு பூஜை செய்து விரதத்தை நிறைவு செய்தனர். மேலும் அன்னதானமும் வழங்கினர்.


Next Story