போலி ஆவணங்கள் மூலம் சென்னையில் தங்கியிருந்த இலங்கை பெண் மதபோதகர் கைது


போலி ஆவணங்கள் மூலம் சென்னையில் தங்கியிருந்த இலங்கை பெண் மதபோதகர் கைது
x
தினத்தந்தி 24 Aug 2022 1:45 AM IST (Updated: 24 Aug 2022 1:45 AM IST)
t-max-icont-min-icon

இந்திய பாஸ்போர்ட் பெறுவதற்காக விண்ணப்பிக்க தாக்கல் செய்த ஆவணங்கள் அனைத்தும் போலியானவை என்று கண்டுபிடிக்கப்பட்டது.

சென்னை:

இலங்கை நாட்டை சேர்ந்த பெண்மணி மானுவல் மரிய செல்வம் (வயது 43). இவர் கடந்த 2016-ம் ஆண்டு இலங்கையில் இருந்து இந்தியா வந்தார். சென்னை அண்ணாநகர் (கிழக்கு) பகுதியில் தங்கி மத போதகராகவும் செயல்பட்டு வந்தார்.

இதற்கிடையில் இந்திய நாட்டின் குடியுரிமை பெற்ற ஆவணங்களுடன் இந்திய நாட்டின் பாஸ்போர்ட் பெறுவதற்காக விண்ணப்பித்தார். அதன்பேரில் பாஸ்போர்ட்டும் வழங்கப்பட்டது. இதற்கிடையில் அவர் தாக்கல் செய்த ஆவணங்கள் அனைத்தும் போலியானவை என்று கண்டுபிடிக்கப்பட்டது.

இதனைத்தொடர்ந்து சாஸ்திரிநகரில் உள்ள வெளிநாட்டினர் பிராந்திய பதிவு அலுவலக குடியேற்ற பிரிவு அதிகாரி நிபின் ஜோசப், மத்திய குற்றப்பிரிவு போலீசில் புகார் அளித்தார். புகாரின்பேரில் போலீசார் விசாரணை நடத்தினார்.

அப்போது, மானுவல் மரிய செல்வத்தின் இலங்கை பாஸ்போர்ட் காலாவதியாகிவிட்டதும், ஆதார், பான் கார்டு போன்ற ஆவணங்களை அவர் போலியாக தயார் செய்திருப்பதும், சட்டவிரோதமாக இந்தியாவில் தங்கியிருப்பதும் தெரியவந்தது.

இதையடுத்து போலி ஆவணங்கள் மூலம் இந்திய பிரஜையாக இங்கு தங்கியிருந்த குற்றத்துக்காக அவரை மத்திய குற்றப்பிரிவு போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.


Next Story