ரசாயன சுத்திகரிப்பு தொட்டியில் பிணமாக கிடந்த மாணவன்
ஆற்காடு அருகே தனியார் தோல் சுத்திகரிப்பு நிறுவனத்தில் உள்ள ரசாயன சுத்திகரிப்பு தொட்டியில் மாணவன் பிணமாக கிடந்தான். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
பிணமாக கிடந்தான்
ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு வண்டிக்கார தெருவை சேர்ந்தவர் சேதுராமன். இவரது மகன் தீபேஷ் (வயது 16). ஆற்காட்டில் உள்ள ஒரு நிதியுதவி பள்ளியில் 9-ம் வகுப்பு படித்து வந்தான். நேற்று மதியம் மாணவனின் சித்தப்பா லாரி டிரைவரான நந்தகுமார் தனது லாரியில் புளிய மர விறகுகளை ஏற்றுக் கொண்டு மேல்விஷாரத்தில் உள்ள ஒரு தோல் சுத்திகரிப்பு நிலையத்திற்கு சென்றுள்ளர். அவருடன் மாணவன் தீபேஷும் சென்றுளளான்.
தோல் சுத்திகரிப்புநிலையத்தின் கேட் பகுதியில் மாணவனை இறக்கிவிட்டு விட்டு, நந்தகுமார் உள்ளே சென்றுள்ளார். பிறகு சிறிது நேரம் கழித்து வந்து பார்த்தபோது திபேஷை காணவில்லை. அப்பகுதியில் தேடிபார்த்தபோது பயன்பாட்டில் இல்லாத ரசாயன சுத்திகரிப்பு தொட்டியில் தேங்கியிருந்த மழைநீரில் மாணவன் தீபேஷ் பிணமாக மிதப்பது தெரிய வந்தது.
போலீஸ் விசாரணை
இது குறித்து ஆற்காடு டவுன் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் பள்ளி மாணவன் பிணத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆற்காடு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் மாணவன் எப்படி தொட்டியில் விழுந்து இறந்தான் என்பது தெரிய வில்லை. இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.