கிராம மக்கள் திடீர் மறியல்


கிராம மக்கள் திடீர் மறியல்
x
தினத்தந்தி 27 Jan 2023 12:15 AM IST (Updated: 27 Jan 2023 12:17 AM IST)
t-max-icont-min-icon

சங்கராபுரம் அருகே கிராமசபை கூட்டத்தை வேறு இடத்துக்கு மாற்றியதால் ஆத்திரம் அடைந்த கிராமமக்கள் திடீர் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்

கள்ளக்குறிச்சி

சங்கராபுரம்

கிராமசபை கூட்டம்

சங்கராபுரம் அருகே உள்ள பழையனூர் ஊராட்சியில் குடியரசு தின விழாவையொட்டி கிராமசபை கூட்டம் வழக்கமாக நடைபெறும் ரேஷன்கடை அருகே உள்ள அரசமரத்தடிக்கு பதிலாக ஊரின் மைய பகுதியில் உள்ள களத்தில் நடைபெற்றது. இதற்கு ஊராட்சி மன்ற தலைவர் செல்லம்மாள் தலைமை தாங்கினார்.

ஆனால் கிராமசபை கூட்டத்தை இடம் மாற்றியதற்கு எதிர்ப்பு தெரிவித்து அப்பகுதி மக்கள் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர். அப்போது வழக்கமான இடத்தில் கிராம சபை கூட்டம் நடத்த வேண்டும், ஊராட்சியில் உள்ள குடிநீர் கிணற்றை சுத்தம் செய்ய வேண்டும், மினி குடிநீர் தொட்டிகளை பழுது பார்க்க வேண்டும், உடைந்த சிறுபாலத்தை சீரமைக்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷம் எழுப்பினர். இதனால் அங்கு போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

பேச்சுவார்த்தை

இதுபற்றிய தகவல் அறிந்து வந்த வட்டார வளர்ச்சி அலுவலர் செல்வகணேஷ், போலீஸ் இன்ஸ்பெக்டர் பாண்டியன் சாலை மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது ஊராட்சியில் வெவ்வேறு இடங்களில் சுழற்சி முறையில் கிராமசபை கூட்டத்தை நடத்த வேண்டும் என்ற அரசின் உத்தரவு அடிப்படையில் தான் கூட்டம் நடத்தப்படுகிறது, இதர கோரிக்கைகள் அனைத்தும் 10 நாட்களுக்குள் சரி செய்து தரப்படும் என்று உறுதியளித்தனர். இதை ஏற்று அவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

இந்த சாலை மறியல் போராட்டத்தால் பழையனூர் - தியாகதுருகம் சாலையில் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.


Next Story