வேன் மீது கார் மோதியதில் வாலிபர் பலி


வேன் மீது கார் மோதியதில் வாலிபர் பலி
x

கரூர் அருகே வேன் மீது கார் மோதியதில் வாலிபர் பலியானார். 2 பேர் படுகாயம் அடைந்தனர்.

கரூர்

வேன் மீது கார் மோதல்

கரூர் மாவட்டம், அரவக்குறிச்சி அருகே உள்ள ராஜபுரம் மேற்கு தெருவை சேர்ந்தவர் கதிர்வேல் (வயது 65). இவரது மகன் சரவணகுமார் (35). இவர் சொந்தமாக மினி சரக்கு வேன் வைத்து வாடகைக்கு ஓட்டி வருகிறார். இந்த நிலையில் நேற்று மதியம் சரவணகுமார், கதிர்வேலை தனது வேனில் ஏற்றி கொண்டு சொந்த வேலை நிமித்தமாக அரவக்குறிச்சியில் இருந்து கரூருக்கு சென்று கொண்டிருந்தார்.

கரூர் அருகே சடையப்ப கவுண்டன்புதூர் பகுதியில் வந்தபோது, எதிரே கரூரில் இருந்து திண்டுக்கல் நோக்கி ஈரோடு மரப்பாலம் பகுதியை சேர்ந்த முகமது அலி என்பவர் ஓட்டி வந்த கார் கட்டுப்பாட்டை இழந்து சாலையின் நடுப்பகுதியில் உள்ள தடுப்பு சுவரை தாண்டி சரவணகுமார் வந்த வேன் மீது பயங்கரமாக மோதியது.

வாலிபர் பலி

இதில் வேனின் முன் பகுதி அப்பளம் போல் நொறுங்கியது. இதில் இடிபாடுகளில் சிக்கி சரவணகுமார், கதிர்வேல் படுகாயம் அடைந்து உயிருக்கு போராடினர். காரை ஓட்டி வந்த முகமது அலியும் படுகாயம் அடைந்தார். இதுகுறித்து தகவல் அறிந்த வெள்ளியணை போலீசார் சம்பவ இடத்திற்கு வந்தனர். பின்னர் படுகாயம் அடைந்த 3 பேரையும் போலீசார் மீட்டு சிகிச்சைக்காக கரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

ஆனால் மருத்துவமனைக்கு செல்லும் வழியிலேயே சரவணகுமார் பரிதாபமாக இறந்தார். கதிர்வேல், முகமது அலி ஆகியோர்மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த விபத்து குறித்து வெள்ளியணை போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story