காதலியின் கழுத்தை இறுக்கி கொலை செய்த வழக்கில் வாலிபர் கைது
காதலியின் கழுத்தை இறுக்கி கொலை செய்த வழக்கில் வாலிபர் கைது செய்யப்பட்டார்.
காஞ்சீபுரம் மாவட்டம் வாலாஜாபாத் ஒன்றியம் ஏலக்காய்மங்கலம் பகுதியை சேர்ந்தவர் அமல்ராஜ். இவருடைய மகள் ஷீபா (வயது 25), இவர் குன்னவாக்கம் பகுதியில் உள்ள ஒரு தனியார் தொழிற்சாலையில் வேலை செய்து வந்தார். கடந்த ஞாயிற்றுக்கிழமை அன்று வீட்டை விட்டு வெளியே சென்ற அவர் வீடு திரும்பவில்லை.
இதனால் சந்தேகம் அடைந்த ஷீபாவின் குடும்பத்தினர் ஷீபாவை காணவில்லை என ஒரகடம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர்.
புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி ஷீபாவிடம் செல்போனில் பேசிய ஒரகடம் அடுத்த பண்ருட்டி பகுதியை சேர்ந்த டிரைவர் சாமுவேல் (வயது 26) என்பவரை பிடித்து விசாரித்து வந்தனர். விசாரணையில் ஷீபாவும் சாமுவேலும் காதலித்து வந்தது போலீசாருக்கு தெரியவந்தது.
சாமுவேல் போலீசாரிடம் அளித்த வாக்குமூலத்தில் கூறியதாவது:-
ஷீபாவும் நானும் ஒரு ஆண்டாக காதலித்து வந்தோம். தொடர்ந்து தன்னை திருமணம் செய்து கொள்ளும்படி வற்புறுத்தி வந்தார். இதனால் எங்களுக்குள் அடிக்கடி தகராறு ஏற்பட்டது. நான் ஏற்கனவே வேறு ஒரு பெண்ணை காதலிக்கிறேன். ஆகவே உன்னை திருமணம் செய்து கொள்ள மாட்டேன் என்றேன். இருப்பினும் ஷீபா திருமணம் செய்ய தொடர்ந்து வற்புறுத்தியதால் கடந்த ஞாயிற்றுக்கிழமை ஷீபாவை காரில் பல்வேறு பகுதிகளுக்கு அழைத்து சென்றுவிட்டு வீடு திரும்பிய போது சுங்குவார்சத்திரம் அருகே உள்ள கோவலவேடு ஏரி பகுதிக்கு ஷீபாவை நைசாக அழைத்துச்சென்று ஷீபாவின் கழுத்தை டி சார்ட் மூலம் நெரித்து கொலை செய்து உடலை ஏரி மதகு பகுதியில் வீசினேன்.
இவ்வாறு அந்த வாக்குமூலத்தில் குறிப்பிடப்பட்டிருந்தது. இதை தொடர்ந்து போலீசார் சாமுவேலை கைது செய்தனர்.