அடுத்தடுத்த கடைகளில் திருடிய வாலிபர் கைது
அடுத்தடுத்த கடைகளில் திருடிய வாலிபர் கைது செய்யப்பட்டார்.
எஸ்.புதூர்,
எஸ்.புதூர் ஒன்றியம் நாகமங்கலம் கிராமம் சர்வீஸ் ரோடு அருகில் 10-க்கும் மேற்பட்ட கடைகள் உள்ளன. சம்பவத்தன்று இரவு வியாபாரிகள் கடையை பூட்டி சென்றனர். மறுநாள் காலை கடையை திறக்க வந்தபோது கடையின் பூட்டு உடைக்கப்பட்டிருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். அப்போது செல்போன் கடையில் 5 ஸ்மார்ட் போன் உள்பட ரூ.50 ஆயிரம் மதிப்புள்ள பொருட்கள், ஏ.சி. மெக்கானிக் கடையில் ரூ.5 ஆயிரம், டெய்லர் கடையில் ரூ.10 ஆயிரம் திருடப்பட்டிருந்தது.
இதுகுறித்த புகாரின் பேரில் புழுதிபட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். மேலும் அந்த பகுதிகளில் வைக்கப்பட்டிருந்த சி.சி.டி.வி. கேமரா பதிவுகளை ஆய்வு செய்தனர். அதில் கடைகளில் திருடியவர் சேலத்தை சேர்ந்த தனுஷ்கரன் (வயது26) என்பது தெரியவந்தது. இதையடுத்து திருச்சியில் பதுங்கி இருந்த அவரை போலீசார் கைது செய்தனர்.