வழக்கு செலவுக்காக மீண்டும் கொள்ளையனாக மாறிய வாலிபர்
வழக்கு செலவுக்காக மீண்டும் கொள்ளையனாக மாறிய வாலிபர் போலீசாரால் கைது செய்யப்பட்டார்.
நகை, பணம் கொள்ளை
மாம்பாக்கத்தை அடுத்த வேங்கடமங்கலத்தில் உள்ள வீரபாண்டிய நகரில் வசித்து வருபவர் விநாயகம். இவர் பொதுப்பணித்துறையில் பணியாற்றி ஓய்வுபெற்று தனது மனைவி உஷாராணியுடன் வசித்து வருகிறார். கடந்த ஜனவரி மாதம் கணவன், மனைவி இருவரும் வீட்டை பூட்டிவிட்டு சபரிமலைக்கு சென்றனர். பின்னர் அவர்கள் திரும்பி வந்து பார்த்தபோது, வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு வீட்டிலிருந்த நகை, பணம் கொள்ளை போனது தெரியவந்தது. இச்சம்பவம் குறித்து தாழம்பூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து, அங்குள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை வைத்து கொள்ளையர்களை தேடி வந்தனர்.
கொள்ளையன் கைது
இந்நிலையில் கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டதாக தூத்துக்குடி மாவட்டத்தைச்சேர்ந்த, தற்போது மாடம்பாக்கத்தில் வசித்து வரும் பிரபல கொள்ளையனான பால்சாமி (எ) பாலு (வயது 41) என்பவனை தனிப்படைபோலீசார் கைது செய்தனர். விசாரணையில் இவனுடைய கூட்டாளியான ரவி (எ) அலைஸ் மாரியப்பன் (வயது 45) என்பவனுடன் சேர்ந்து கொள்ளையில் ஈடுபட்டது தெரியவந்தது. கைதான பால்சாமி மீது ஈரோடு மாவட்டத்தில் 10-க்கும் மேற்பட்ட கொள்ளை வழக்குகள் உள்ளன.
மீண்டும் கொள்ளையனாக மாறிய வாலிபர்
கடந்த 2018-ம் ஆண்டு பெருந்துறை பகுதியில் நடந்த ஒரு கொள்ளை வழக்கில் கைதாகி சிறைக்கு சென்றுவிட்டு திரும்பி வந்ததும் தன்னுடைய குடும்பத்தை எண்ணி திருந்தி வாழ்ந்ததாகவும், ஆனால் பழைய வழக்குகளுக்காக அலைந்து திரிந்ததாகவும் வழக்குகளை நடத்த பணம் இல்லாததால் மீண்டும் கொள்ளையனாக மாறியதாக விசாரணையில் தெரிவித்ததாக போலீசார் தெரிவித்தனர். கைதான பால்சாமியிடம் இருந்து 20 பவுன் தங்க நகை மீட்கப்பட்டது. இந்த கொள்ளை வழக்கில் தீவிரமாக துப்பு துலக்கி கொள்ளையனை கைதுசெய்த போலீசாரை தாம்பரம் போலீஸ் கமிஷனர் அமல்ராஜ் பாராட்டினார்.