மறைமலைநகரில் கார் உதிரி பாகம் தயாரிக்கும் தொழிற்சாலையில் பயங்கர தீ விபத்து


மறைமலைநகரில் கார் உதிரி பாகம் தயாரிக்கும் தொழிற்சாலையில் பயங்கர தீ விபத்து
x

மறைமலைநகரில் கார் உதிரி பாகம் தயாரிக்கும் தொழிற்சாலையில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. ஊழியர்கள் யாராவது சிக்கி உள்ளார்களா? என போலீசார் விசாரித்து வருகின்றனர்.

செங்கல்பட்டு

தீ விபத்து

செங்கல்பட்டு மாவட்டம் மறைமலைநகர் தொழிற்பேட்டை அண்ணா சாலையில் யாசகி இந்தியா பிரைவேட் லிமிடெட் என்ற தனியார் நிறுவனம் இயங்கி வருகிறது. இதில் காருக்கு பயன்படுத்தப்படும் எலக்ட்ரிக் ஒயர்கள் தயாரிக்கப்படுகிறது. இந்த தொழிற்சாலையில் 3 ஷிப்டு முறையில் ஆண், பெண் உள்பட 3 ஆயிரம் ஊழியர்கள் பணிபுரிந்து வருகின்றனர்.

இந்த நிலையில் நேற்று மதியம் 2 மணிக்கு வந்த ஆயிரத்துக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தனர். நேற்று இரவு சுமார் 8.30 மணியளவில் திடீரென கம்பெனி ஸ்டோர் அறையில் இருந்து தீப்பொறி கிளம்பி உள்ளது. இதனை பார்த்த தொழிற்சாலையில் பணியில் இருந்த ஆண், பெண் ஊழியர்கள் அனைவரும் அலறியடித்துக் கொண்டு தொழிற்சாலையில் இருந்து வெளியே ஓடிவந்து எதிரே உள்ள சாலையில் நின்று கொண்டனர். ஆனால் தீ மளமளவென பரவி கொழுந்துவிட்டு பயங்கரமாக எரிய தொடங்கியது.

தீயை அணைக்கும் முயற்சி

இந்த சம்பவம் பற்றி தகவல் அறிந்த மறைமலைநகர், ஒரகடம், திருக்கழுக்குன்றம், செங்கல்பட்டு, மகேந்திரா சிட்டி உள்பட பல்வேறு பகுதியில் இருந்து 7-க்கும் மேற்பட்ட தீயணைப்பு வாகனங்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து தீயணைப்பு வீரர்கள் தண்ணீர் பீச்சி அடித்து தொழிற்சாலையில் ஏற்பட்ட தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதனால் தொழிற்சாலை மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் கரும்புகை மண்டலமாக காட்சியளித்தது. ஏதாவது அசம்பாவிதம் நடந்தால் உடனடியாக அவர்களை ஆஸ்பத்திரிக்கு அழைத்து செல்வதற்காக 5-க்கும் மேற்பட்ட ஆம்புலன்ஸ் வாகனங்கள் கம்பெனி எதிரே உள்ள சாலையில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.

போலீசார் பாதுகாப்பு

சம்பவ இடத்தில் கூடுவாஞ்சேரி உதவி போலீஸ் கமிஷனர் ஜெயராஜ் மற்றும் ஏராளமான போலீசார் அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். சம்பவம் பற்றிய தகவல் அறிந்த செங்கல்பட்டு எம்.எல்.ஏ.வரலட்சுமி மதுசூதனன் சம்பவம் பற்றி போலீசாரிடம் கேட்டறிந்தார். தொடர்ந்து 2 மணி நேரத்திற்கு மேலாக தீ கொழுந்து விட்டு எரிந்து கொண்டிருப்பதால் அப்பகுதியில் ஒரு பரபரப்பான சூழ்நிலை நிலவி வருகிறது.

போலீசார் விசாரணை

இந்த தீ விபத்து மின்கசிவு காரணமாக ஏற்பட்டதா? அல்லது வேறு ஏதாவது காரணமா? என தீயணைப்பு அதிகாரிகள் மற்றும் மறைமலைநகர் போலீசார் தீவிரமாக விசாரித்து வருகின்றனர். மேலும் தீ விபத்தில் ஊழியர்கள் யாராவது சிக்கி உள்ளார்களா? என்பது பற்றி முழுவிபரம் தெரியவில்லை. முழுமையாக தீயை அணைத்த பிறகே எவ்வளவு சேதம் குறித்த விபரம் தெரிய வரும் என போலீசார் தெரிவித்தனர். இதுகுறித்து மறைமலைநகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.


Next Story