கோவை: சரவணம்பட்டி அருகே தனியார் கெமிக்கல் கம்பெனியில் பயங்கர தீ
கோவை அருகே தனியார் கெமிக்கல் கம்பெனியில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்து குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
கோவை:
கோவை சரவணம்பட்டியை அடுத்த கரட்டுமேடு விசுவாசபுரத்தைச் சேர்ந்தவர் ரங்கசாமி. இவரது மகன் குமார் (வயது 40). இவர் அந்த பகுதியில் ஆர்பிகே கெமிக்கல் என்ற கம்பெனி நடத்தி வருகிறார். இதில் பெயிண்டிற்கு கலக்கக்கூடிய தின்னர் மொத்தமாக பேரல்களில் வாங்கி பாட்டில்களில் அடைத்து கோயம்புத்தூர் முழுவதும் பெயிண்ட் கடைகள் சப்ளை செய்து வருகிறார்.
இந்த நிலையில் இன்று மாலை இவரது கம்பெனியில் திடீர் தீ விபத்து ஏற்பட்டது. இது குறித்து கோவில்பாளையம் போலீசார் மற்றும் கணபதி தீயணைப்பு துறையினருக்கு தகவல் கொடுத்தனர்.
அதன் அடிப்படையில் கோவில்பாளையம் இன்ஸ்பெக்டர் சிவக்குமார் மற்றும் கணபதி தீயணைப்பு துறையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். அங்கு தீ விபத்து ஏற்பட்ட குமாரின் கம்பெனியில் தீயணைப்புத் துறையினர் தீயை அணைக்க முயற்சி செய்தனர்.
இதில் பாரல்களில் இருந்த தின்னர்கள் மல மலவென்று தீப்பிடித்ததில் குமாருக்கு கை கால்களில் காயங்கள் ஏற்பட்டது. மேலும் இந்த தீ விபத்தால் கம்பெனியின் மேல் கூரைகள் உடைந்து சரிந்து விழுந்தன. கம்பெனியில் வேலையில் இருந்த வேலை ஆட்கள் அனைவரும் காயங்கள் இல்லாமல் மீட்கப்பட்டனர்.
அதனை தொடர்ந்து குமார் மீட்கப்பட்டு சரவணம்பட்டியில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டார். இது குறித்து கோவில்பாளையம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.