கொடைக்கானல் அருகே தோட்டங்களுக்குள் புகுந்து காட்டு யானை அட்டகாசம்


கொடைக்கானல் அருகே தோட்டங்களுக்குள் புகுந்து காட்டு யானை அட்டகாசம்
x

கொடைக்கானல் அருகே தோட்டங்களுக்குள் புகுந்து காட்டு யானை அட்டகாசம் செய்தது.

திண்டுக்கல்

கொடைக்கானலில், அடர்ந்த வனப்பகுதியில் உள்ள பேரிஜம் ஏரி பகுதியில் கடந்த சில நாட்களுக்கு முன்பு காட்டு யானைகள் கூட்டம் உலா வந்தது. மேலும் வனப்பகுதி சுற்றுலா இடங்களுக்கு இடம்பெயர்ந்து காட்டு யானைகள் அட்டகாசம் செய்தன. இதனால் சுற்றுலா இடங்களுக்கும், பேரிஜம் ஏரி பகுதிக்கும் செல்ல சுற்றுலா பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டது. பின்னர் காட்டு யானைகள் அடர்ந்த வனப்பகுதிக்கு இடம்பெயர்ந்தன. அதைத்தொடர்ந்து சுற்றுலா இடங்களுக்கு செல்ல சுற்றுலா பயணிகளுக்கு மீண்டும் அனுமதி அளிக்கப்பட்டது.

இந்தநிலையில் கொடைக்கானல் அருகே பேத்துப்பாறை, பாரதி அண்ணாநகர், கோம்பை, புலியூர், தாண்டிக்குடி உள்ளிட்ட மலைக்கிராமங்களில் ஒற்றை காட்டு யானை முகாமிட்டு விவசாய நிலங்களையும், பயிர்களையும் சேதப்படுத்தி அட்டகாசம் செய்து வருகிறது. குறிப்பாக வில்பட்டி ஊராட்சிக்கு உட்பட்ட புலியூர் கிராமத்தில் வனப்பகுதியை ஒட்டியுள்ள தோட்டங்களுக்குள் அந்த யானை உலா வந்து, பயிர்களை நாசம் செய்து வருகிறது. மேலும் இரவு நேரத்தில் தோட்டங்களுக்கு காவல் பணிக்கும் செல்லும் விவசாயிகளை அந்த காட்டு யானை அச்சுறுத்தி வருகிறது. எனவே புலியூரில் முகாமிட்டுள்ள ஒற்றை காட்டு யானையை அடர்ந்த வனப்பகுதிக்குள் விரட்ட வனத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மலைக்கிராம விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


Next Story