மலை ரெயிலை வழிமறித்த காட்டு யானை


மலை ரெயிலை வழிமறித்த காட்டு யானை
x
தினத்தந்தி 9 Aug 2023 2:30 AM IST (Updated: 9 Aug 2023 2:30 AM IST)
t-max-icont-min-icon

மேட்டுப்பாளையம்-குன்னூர் இடையே மலை ரெயிலை காட்டு யானை வழிமறித்தது. இதனால் ரெயில் நடுவழியில் நிறுத்தப்பட்டதால் பயணிகள் தவித்தனர்.

நீலகிரி

குன்னூர்

மேட்டுப்பாளையம்-குன்னூர் இடையே மலை ரெயிலை காட்டு யானை வழிமறித்தது. இதனால் ரெயில் நடுவழியில் நிறுத்தப்பட்டதால் பயணிகள் தவித்தனர்.

மலை ரெயில்

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் இருந்து நீலகிரி மாவட்டம் ஊட்டி இடையே தினசரி மலை ரெயில் இயக்கப்பட்டு வருகிறது. பாரம்பரிய அந்தஸ்து பெற்ற இந்த மலை ரெயிலில் பயணிக்க சுற்றுலா பயணிகள் ஆர்வம் காட்டி வருகின்றனர். குன்னூர்-மேட்டுப்பாளையம் இடையே அடர்ந்த வனப்பகுதியின் நடுவே மலை ரெயில் பாதை உள்ளது. ரெயில் பாதை, தேசிய நெடுஞ்சாலையையொட்டி காபி தோட்டங்கள், வனப்பகுதிகளில் பலா மரங்கள் உள்ளன.

தற்போது பலாப்பழ சீசன் காரணமாக, பழங்களை ருசிப்பதற்காக சமவெளி பகுதிகளில் இருந்து காட்டு யானைகள் முகாமிட்டு வருகின்றன. அவை பலாப்பழத்தை தேடி சாலை மற்றும் ரெயில் பாதையில் நடமாடுகிறது. இதற்கிடையே யானை கூட்டத்தில் இருந்து பிரிந்த ஒரு காட்டு யானை கடந்த சில நாட்களாக ரெயில் பாதையில் உலா வந்த வண்ணம் உள்ளது. இந்தநிலையில் நேற்று காலை 7.10 மணிக்கு மேட்டுப்பாளையத்தில் இருந்து மலை ரெயில் ஊட்டிக்கு புறப்பட்டு வந்து கொண்டிருந்தது.

காட்டு யானை

ஹில்குரோவ்-ரன்னிமேடு ரெயில் நிலையங்கள் இடையே வந்த போது, ரெயில் தண்டவாளம் பகுதியில் காட்டு யானை உலா வந்தது. மேலும் அந்த யானை மலை ரெயிலை வழிமறித்து நின்றது. இதனால் சிறிது தூரத்துக்கு முன்னால், ரெயில் நடுவழியில் நிறுத்தப்பட்டது. இதனால் மலை ரெயிலில் பயணித்த சுற்றுலா பயணிகள் தவித்தனர்.

சுமார் ½ மணி நேரத்துக்கு பின்னர் யானை ரெயில் பாதையில் இருந்து வனப்பகுதிக்குள் சென்றது. அதன் பின்னரே சுற்றுலா பயணிகள் நிம்மதி அடைந்தனர். தொடர்ந்து ½ மணி நேரம் தாமதமாக மலை ரெயில் அங்கிருந்து புறப்பட்டு காலை 11 மணிக்கு குன்னூரை வந்தடைந்தது. இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

1 More update

Related Tags :
Next Story