ரெயிலில் அடிபட்டு காட்டுயானை சாவு
வாளையாறு அருகே ரெயிலில் அடிபட்டு காட்டு யானை உயிரிழந்தது.
வாளையாறு அருகே ரெயிலில் அடிபட்டு காட்டு யானை உயிரிழந்தது.
ரெயில் மோதியது
கோவை வனக்கோட்டம் மதுக்கரை வனச்சரகத்துக்கு உட்பட்ட பகுதியில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு ரெயில் மோதி 3 காட்டு யானைகள் உயிரிழந்தன. இதையடுத்து அந்த பகுதியில் இதுபோன்ற சம்பவங்கள் நடப்பதை தடுக்க வனத்துறையினர் தீவிர நடவடிக்கை மேற்கொண்டு வருகிறார்கள்.
இந்த நிலையில் கேரள மாநிலம் வாளையார் அருகே கொட்ட முட்டி என்ற இடத்தில் நேற்று அதிகாலை 3.15 மணியளவில் தண்டவாளத்தை கடக்க முயன்ற காட்டு யானை மீது அந்த வழியாக சென்ற ரெயில் மோதியது. இதில் பலத்த காயம் அடைந்த அந்த காட்டு யானை சம்பவ இடத்திலேயே துடிதுடித்து பரிதாபமாக உயிரிழந்தது. அது 24 வயதான பெண் யானை ஆகும்.
பிரேத பரிசோதனை
இது குறித்து தகவல் அறிந்த கேரள போலீசார் மற்றும் வனத்துறையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். பின்னர் அந்த யானையின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனை செய்துவிட்டு அங்கேயே குழி தோண்டி புதைத்தனர். காட்டு யானையின் மீது மோதிய ரெயில் அதிவேகமாக சென்றதே இந்த விபத்துக்கு காரணம் என்று கூறப்படுகிறது. மேலும் இந்த சம்பவம் குறித்து வாளையாறு பகுதி வனத்துறையினர் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
கடந்த 2002-ம் ஆண்டு முதல் தற்போது வரை 15 காட்டு யானைகள் கஞ்சிகோட்டில் இருந்து வாளையாறு செல்லும் பாதையில் ரெயிலில் அடிபட்டு உயிரிழந்து உள்ளன. இந்த விவகாரத்தில் ரெயில்வே நிர்வாகம் உடனடி நடவடிக்கை எடுத்து வனப்பகுதியை ஒட்டி இருக்கும் இடங்களில் ரெயில்களை மெதுவாக இயக்க வழிவகை செய்ய வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தி உள்ளனர்.