தண்ணீர் லாரி சக்கரத்தில் சிக்கி தலை துண்டாகி பெண் பலி


தண்ணீர் லாரி சக்கரத்தில் சிக்கி தலை துண்டாகி பெண் பலி
x

தண்ணீர் லாரி சக்கரத்தில் சிக்கி தலை துண்டாகி கணவர் கண் எதிரேயே பெண் பலியான சம்பவம் அனகாபுத்தூரில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.

சென்னை

தாம்பரம்,

சென்னையை அடுத்த பல்லாவரம் இந்திரா நகரைச் சேர்ந்தவர் சின்னையா(வயது 65). இவர், தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார். இவருடைய மனைவி நாகம்மாள்(59). நேற்று முன்தினம் காலை கணவன்-மனைவி இருவரும் இருசக்கர வாகனத்தில் பல்லாவரத்தில் இருந்து தாம்பரம் கன்னடப்பாளையத்தில் உள்ள ஆஸ்பத்திரிக்கு சென்றனர்.

பம்மல்-திருநீர்மலை சாலையில் அனகாபுத்தூர் அருகே சென்றபோது, எதிர்பாராதவிதமாக இருசக்கர வாகனம் கட்டுப்பாட்டை இழந்து, சாலையில் படுத்துகிடந்த மாடு மீது மோதி கவிழ்ந்தது. இதில் கணவன்-மனைவி இருவரும் இருசக்கர வாகனத்தோடு சாலையில் விழுந்தனர்.

அப்போது வலது பக்கமாக விழுந்த நாகம்பாள் மீது, எதிரே வந்த தண்ணீர் லாரி ஏறி இறங்கியது. லாரி சக்கரத்தில் சிக்கிய நாகம்மாள், தலை துண்டாகி அதே இடத்தில் கணவர் கண் எதிரேயே பரிதாபமாக இறந்தார்.

ரத்த வெள்ளத்தில் கிடந்த மனைவியின் உடலை பார்த்து சின்னையா கதறி துடித்தார். மனைவியின் உடலை கட்டிப்பிடித்தபடி அவர் அழுத காட்சி பார்ப்போரை கண்கலங்க செய்தது. விபத்து நடந்த உடன் லாரியை நிறுத்திவிட்டு டிரைவர் தப்பி ஓடிவிட்டார்.

இதுபற்றி தகவல் அறிந்து வந்த குரோம்பேட்டை போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார், பலியான நாகம்மாள் உடலை பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுபற்றி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

அனகாபுத்தூர், பம்மல் பகுதியில் இரவு நேரங்களில் மாடுகள் சாலையில் சுற்றி திரிவதும், படுத்து கிடப்பதுமாக உள்ளன. இதுபற்றி தாம்பரம் மாநகராட்சி அதிகாரிகளுக்கு பலமுறை புகார் அளித்தும் சாலையில் மாடுகள் சுற்றித்திரிவதை தடுக்க எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என வாகன ஓட்டிகள் புகார் தெரிவிக்கின்றனர்.

சாலையில் நிற்கும் மாடுகள் திடீரென சாலையின் குறுக்கே ஓடுவதாலும், ஒன்றோடு ஒன்று சண்டையிடுவதாலும் அடிக்கடி அந்த பகுதிகளில் வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்குவதாகவும் அந்த பகுதி பொதுமக்கள் தெரிவித்தனர். மீண்டும் இதுபோன்ற விபத்தில் உயிர் பலி ஏற்படுவதை தடுக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


Next Story