மோட்டார் சைக்கிளில் சென்ற பெண் மயங்கி விழுந்து சாவு
மோட்டார் சைக்கிளில் சென்ற பெண் மயங்கி விழுந்து உயிரிழந்தார்.
திருச்சி திருவானைக்காவல் காந்தி மெயின் ரோடு பகுதியை சேர்ந்தவர் ராஜேஸ்வரி(வயது 58). கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு ராஜேஸ்வரியின் கணவர் சுந்தரம் இறந்துவிட்டார். இந்த நிலையில் பொங்கல் பண்டிகைக்காக ராஜேஸ்வரி, பெரம்பலூரை அடுத்த சிறுவாச்சூர் நடுத்தெருவில் உள்ள தனது சகோதரர் கமலக்கண்ணன் வீட்டிற்கு வந்து தங்கியிருந்தார்.
ராஜேஸ்வரிக்கு சர்க்கரை நோய் மற்றும் ரத்த அழுத்தம் இருந்துள்ளது. இதற்காக அவர் பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு சென்று டாக்டரிடம் காண்பித்து விட்டு மாத்திரைகளை பெற்றுக் கொண்டு கமலக்கண்ணனுடன் ேமாட்டார் சைக்கிளில் சிறுவாச்சூருக்கு திரும்பி சென்று கொண்டு இருந்தார்.
பெரம்பலூரில் பாலக்கரை பகுதியில் உள்ள வேகத்தடை மீது கமலக்கண்ணன் ஓட்டிச்சென்ற மோட்டார் சைக்கிள் ஏறி இறங்கியது. அப்போது ராஜேஸ்வரிக்கு மயக்கம் ஏற்பட்டு நிலைதடுமாறி கீழே விழுந்தார்.
இதில் காயம் அடைந்த ராஜேஸ்வரி திருச்சி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி உயிரிழந்தார்.
இது தொடர்பாக ராஜேஸ்வரியின் மகள் கல்பனா பெரம்பலூர் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து ராஜேஸ்வரியின் உடலை கைப்பற்றி விசாரணை நடத்தினர்.