ரூ.1 கோடி அபராதம் வசூலித்து பெண் டிக்கெட் பரிசோதகர் சாதனை


ரூ.1 கோடி அபராதம் வசூலித்து பெண் டிக்கெட் பரிசோதகர் சாதனை
x

தெற்கு ரெயில்வேயை சேர்ந்த பெண் டிக்கெட் பரிசோதகர் ரூ.1 கோடி அபராதம் வசூலித்து சாதனை படைத்துள்ளார்.

சென்னை

உரிய டிக்கெட் இன்றி ரெயிலில் செல்லுபவர்களை கண்டுபிடித்து அபராதம் விதிக்க சென்னை எழும்பூர், சென்டிரல், தாம்பரம், கிண்டி உள்ளிட்ட ரெயில் நிலையங்களில் திடீர் டிக்கெட் பரிசோதனைகள் நடத்தப்பட்டு வருகிறது. இந்த நிலையில், முறையற்ற பயணத்தை தடுக்கும் வகையில், 2022 ஏப்ரல் முதல் 2023 மார்ச் வரை 'ஒரு கோடி கிளப்' என்ற ஒரு புதிய நடைமுறையை தெற்கு ரெயில்வே ஏற்படுத்தியது.

இதில், 2022-2023-ம் நிதியாண்டில் ரூ.1 கோடிக்கும் மேல் அபராதம் வசூலிக்கும் டிக்கெட் பரிசோதகர்கள் இந்த கிளப்பில் சேர்க்கப்படுவார்கள்.

அந்தவகையில், ரூ.1 கோடிக்கும் மேல் அபராதம் வசூலிக்கும் மைல் கல்லை சென்னை கோட்டத்தை சேர்ந்த 3 டிக்கெட் பரிசோதகர்கள் எட்டியுள்ளனர்.

சென்னை கோட்டத்தின் தலைமை டிக்கெட் பரிசோதகர் எஸ்.நந்த குமார் 27 ஆயிரத்து 787 வழக்குகள் பதிவு செய்து ரூ.1 கோடியே 55 லட்சம் அபராதம் வசூலித்துள்ளார்.

இதேபோல, சென்னை கோட்டத்தின் தலைமை டிக்கெட் பரிசோதகர் ரோசலின் ஆரோக்கிய மேரி ரூ.1 கோடியே 3 லட்சம் அபராதம் வசூலித்து சாதனை படைத்துள்ளார். இந்திய ரெயில்வேயில் முதல் முறையாக அதிக அபராதம் வசூலித்த பெண் டிக்கெட் பரிசோதகர் என்ற பெருமையை அவர் பெற்றுள்ளார்.

கூடைப்பந்து வீரரும்,முதுநிலை டிக்கெட் பரிசோதகருமான சக்திவேல் ரூ.1 கோடியே 10 லட்சம் அபராதம் வசூலித்து உள்ளதாக தெற்கு ரெயில்வேயின் சென்னை கோட்டம் தெரிவித்து உள்ளது.

1 More update

Next Story