வயலில் களை எடுத்தபோது மின்னல் தாக்கி பெண் சாவு

கீழப்பழுவூர் அருகே வயலில் களை எடுத்தபோது மின்னல் தாக்கி பெண் உயிரிழந்தார்.
பெண் சாவு
அரியலூர் மாவட்டம், கீழப்பழுவூர் அருகே உள்ள கீழையூர் கிராமத்தை சேர்ந்தவர் நடராஜன். இவரது மனைவி செல்வி(வயது 42). விவசாயியான இவருக்கு சொந்தமான வயல் அதே பகுதியில் உள்ளது. அதில் மக்காச்சோளம் பயிரிட்டுள்ளனர். இந்த நிலையில் நேற்று மக்காச்சோள வயலில் செல்வி களை எடுத்துக்கொண்டு இருந்தார். அப்போது அப்பகுதியில் இடி மின்னலுடன் கூடிய பலத்த மழை பெய்தது. அப்போது எதிர்பாராத விதமாக செல்வியின் மீது மின்னல் தாக்கியது. இதில் படுகாயம் அடைந்து சம்பவ இடத்திலேயே செல்வி உயிரிழந்தார்.
போலீசார் விசாரணை
இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த அப்பகுதி மக்கள் இதுகுறித்து கீழப்பழுவூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். தகவலின் பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று செல்வியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரியலூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். பின்னர் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். உயிரிழந்த செல்விக்கு 2 மகன்கள் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.