ஏரி தண்ணீரில் 7 மணி நேரம் தியானம் செய்த வடமாநில வாலிபர்


ஏரி தண்ணீரில் 7 மணி நேரம் தியானம் செய்த வடமாநில வாலிபர்
x
தினத்தந்தி 18 Jun 2023 5:55 PM GMT (Updated: 19 Jun 2023 9:04 AM GMT)

ஜோலார்பேட்டை அருகே ஏரி தண்ணீரில் 7 மணி நேரம் தியானம் செய்த வடமாநில வாலிபரை தீயணைப்புத்துறையினர் மீட்டனர்.

திருப்பத்தூர்

தண்ணீரில் மூழ்கி தியானம்

ஜோலார்பேட்டையை அடுத்த ஏலகிரி கிராமத்தில் உள்ள ஏரி கடந்த ஆண்டு பெய்த கனமழையால் நிரம்பி கோடி போனது. தற்போதும் ஏரியில் தண்ணீர் உள்ளது. இந்த நிலையில் நேற்று ஏலகிரி ஏரி நடுவில் வடமாநில வாலிபர் ஒருவர் தலை மட்டும் தெரியும் அளவில் தண்ணீரில் மூழ்கி தியானத்தில் ஈடுபட்டுள்ளார். காலை 7 மணியளவில் தண்ணீரில் இறங்கி தியானத்தை தொடங்கி உள்ளார்.

அந்த வழியாக சென்றவர்கள் வெகுநேரமாக ஒருவர் தண்ணீரில் மூழ்கியபடி நின்று ஏதோ செய்து கொண்டு இருப்பதை பார்த்து, உடனடியாக திருப்பத்தூர் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் தீயணைப்பு வீரர்கள் மற்றும் ஏலகிரி ஊராட்சி மன்ற தலைவர் ரகு மற்றும் ஜோலார்பேட்டை போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர்.

தீயணைப்பு வீரர்கள் தண்ணீரில் இறங்கி மதியம் 2 மணியளவில் அவரை மீட்டனர். பின்னர் அவரிடம் போலீசார் விசாரணை நடத்தினர்.

வடமாநில வாலிபர்

விசாரணையில் அவர் உத்தரகாண்ட் மாநிலத்தை சேர்ந்த நித்திஷ் (வயது 32) என்பதும், ரெயில் மூலம் கோயம்புத்தூர் பகுதியில் உள்ள ஈஷா மையத்திற்கு சென்றபோது ஜோலார்பேட்டை ரெயில் நிலையத்தில் இறங்கியதாக தெரிவித்தார். மேலும் இவர் காலை 7 மணி முதல் மதியம் 2 மணி வரை தொடர்ந்து ஏரியில் இறங்கி தியானம் செய்ததும் தெரியவந்தது.

இதனையடுத்து அவரை சோதனை செய்ததில் அவர் அணிந்து இருந்த பேண்ட் பாக்கெட்டில் எண்ணெய் பாட்டில் இருந்தது. அதை பறிமுதல் செய்தனர். அதனை தன்னிடம் தந்துவிடுமாறு கையெடுத்து கும்பிட்டார். ஆனால் போலீசார் எண்ணெய் பாட்டிலை கொடுக்கவில்லை.

அதன் பிறகு ஜோலார்பேட்டை போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரணை மேற்கொண்டு, அவர் கோயம்புத்தூர் சொல்வதாக கூறியதன் பேரில் அவரை அனுப்பி வைத்தனர். இந்த சம்பவத்தால் ஜோலார்பேட்டை பகுதியில் நேற்று பரபரப்பு காணப்பட்டது.


Next Story