சிதம்பரத்தில் ஆனி திருமஞ்சன விழா கோலாகலம்: தேரில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சி தரும் நடராஜ பெருமான்


சிதம்பரத்தில் ஆனி திருமஞ்சன விழா கோலாகலம்: தேரில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சி தரும் நடராஜ பெருமான்
x

பிரசித்தி பெற்ற சிதம்பரம் நடராஜர் கோவில் ஆனித் திருமஞ்சன தேரோட்ட விழா சிறப்பாக நடைபெற்று வருகிறது.

சிதம்பரம்,

சிதம்பரத்தில் உலக புகழ்பெற்ற நடராஜர் கோவில் அமைந்துள்ளது. இக்கோவிலில் ஆனி திருமஞ்சன விழா கடந்த 3-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. அதன்படி, கடந்த செவ்வாய்க்கிழமை தங்க கைலாச வாகன வீதியுலாவும், நேற்று தங்க ரதத்தில் பிச்சாண்டவர் வீதியுலாவும் நடைபெற்றன.

இந்நிலையில் விழாவின் முக்கிய நிகழ்வான திருத்தேரோட்டம் இன்று கோலாகலமாக தொடங்கி நடைபெற்று வருகிறது. 100 டன் எடை, 74 அடி உயரம் கொண்ட பிரம்மாண்ட தேரில் எழுந்தருளி பக்தர்களுக்கு நடராஜ பெருமான் காட்சி தந்து வருகிறார். நான்கு மாட வீதிகளிலும் சுவாமிகள் வீதி உலா வருகின்றனர்.

இதன்படி சித் சபையில் வீற்றுள்ள நடராஜமூர்த்தி, சிவகாமசுந்தரி அம்பாள் மற்றும் உற்சவ மூர்த்திகளான விநாயகர், சுப்பிரமணியர், சண்டிகேஸ்வரர் சுவாமிகள் தனித்தனி தேர்களில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சி அளித்து வருகின்றனர்.

தொடர்ந்து, இரவு 8 மணிக்கு ஆயிரங்கால் மண்டபத்தில் ஏககால லட்சார்ச்சனையும், நாளை (வெள்ளிக்கிழமை) அதிகாலை 3 மணி முதல் 6 மணி வரை சிவகாமசுந்தரி சமேத நடராஜ மூர்த்திக்கு மகா அபிஷேகமும் நடைபெறும். பின்னர், காலை 10 மணிக்கு சித் சபையில் ரகசிய பூஜையும், பஞ்சமூர்த்தி வீதியுலா வந்த பிறகு பிற்பகல் 3 மணிக்கு மேல் ஆனித் திருமஞ்சன தரிசனமும், ஞானகாச சித் சபை பிரவேசமும் நடைபெறும்.

சனிக்கிழமை (ஜூலை 13) பஞ்சமூர்த்தி முத்துப்பல்லக்கு வீதியுலாவுடன் உற்சவம் நிறைவடைகிறது.


Next Story