"மேட்டூர் அணையில் எப்போது வேண்டுமானாலும் 60 ஆயிரம் கன அடிக்கு மேல் தண்ணீர் திறக்கப்படலாம்" - கரையோர மக்களுக்கு எச்சரிக்கை


மேட்டூர் அணையில் எப்போது வேண்டுமானாலும் 60 ஆயிரம் கன அடிக்கு மேல் தண்ணீர் திறக்கப்படலாம் - கரையோர மக்களுக்கு எச்சரிக்கை
x

இன்று மதியம் நிலவரப்படி மேட்டூர் அணைக்கு வரும் நீர்வரத்து வினாடிக்கு 35 ஆயிரம் கன அடியாக உள்ளது.

சேலம்,

கர்நாடகம் மற்றும் கேரள மாநிலங்களில் இந்த ஆண்டு தென்மேற்கு பருவமழை முன்கூட்டியே தொடங்கியது. இதனால் கர்நாடக மாநிலத்தில் உள்ள முக்கிய அணைகள் மே மாத இறுதியிலேயே தனது முழு கொள்ளளவை எட்டியதால், கபினி மற்றும் கிருஷ்ணராஜ சாகர் அணைகளில் இருந்து காவிரி ஆற்றில் உபரிநீர் திறந்து விடப்பட்டது.

இவ்வாறு திறந்து விடப்பட்ட தண்ணீர் மேட்டூர் அணையை வந்தடைந்ததன் காரணமாக மேட்டூர் அணை நீர்மட்டம் படிப்படியாக உயர்ந்து ஜூன் மாதம் 16-ந் தேதி அணையின் உச்சபட்ச நீர்மட்டமான 120 அடியை எட்டி நிரம்பியது. அதன் பிறகு தொடர்ந்து 70 நாட்களுக்கு நீர்மட்டம் 120 அடியாக இருந்தது.

அதபை தொடர்ந்து நீர்மட்டம் படிப்படியாக குறைந்து வந்த நிலையில், காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழை தீவிரம் அடைந்ததன் காரணமாக, மேட்டூர் அணைக்கு நீர்வரத்து மீண்டும் அதிகரித்தது. இதையடுத்து நேற்று அதிகாலை 3.30 மணி அளவில் அணையின் நீர்மட்டம் 120 அடியை எட்டி இந்த ஆண்டில் 2-வது முறையாக மீண்டும் நிரம்பியது.

மேட்டூர் அணை கட்டப்பட்டு 88 ஆண்டுகள் ஆன நிலையில், 42-வது ஆண்டாக இந்த ஆண்டில் இருமுறை அணை நிரம்பி உள்ளது. இன்று மதியம் நிலவரப்படி மேட்டூர் அணைக்கு வரும் நீர்வரத்து வினாடிக்கு 35 ஆயிரம் கன அடியாக உள்ளது. அணைக்கு வரும் தண்ணீர் முழுவதுமாக காவிரி ஆற்றில் திறக்கப்படுகிறது.

இந்நிலையில் நீர்வளத்துறை அதிகாரிகள் சார்பில் வெளியிடப்பட்டுள்ள சுற்றறிக்கையில், அணையின் நீர் இருப்பு 93.47 டி.எம்.சி. ஆக உள்ளதாகவும், அணையின் நீர்மட்டம் 120 அடியாக உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் மேட்டூர் அணையில் இருந்து காவிரி ஆற்றில் எந்த நேரத்தில் வேண்டுமானாலும் 60 ஆயிரம் கன அடிக்கு மேல் தண்ணீர் திறந்து விடப்படலாம் என்பதால் கரையோர மக்கள் எச்சரிக்கையுடன் இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.


Next Story