வெளிநாட்டில் உள்ள கருப்பு பணத்தை மீட்டு வழங்குவதாக கூறி ரூ.11¼ லட்சம் மோசடி: போலீஸ் சூப்பிரண்டிடம் புகார் மனு


வெளிநாட்டில் உள்ள கருப்பு பணத்தை மீட்டு  வழங்குவதாக கூறி ரூ.11¼ லட்சம் மோசடி: போலீஸ் சூப்பிரண்டிடம் புகார் மனு
x
தினத்தந்தி 13 Oct 2023 1:46 AM GMT (Updated: 13 Oct 2023 5:26 AM GMT)

வெளிநாட்டில் உள்ள கருப்பு பணத்தை மீட்டு வழங்குவதாக கூறி ரூ.11¼ லட்சம் மோசடி செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி பாதிக்கப்பட்டவர்கள் போலீஸ் சூப்பிரண்டு ஜவகரிடம் புகார் மனு கொடுத்தனர்.

ஈரோடு

மொடக்குறிச்சி அருகே உள்ள கோவிந்தநாயக்கன்பாளையம் தாளமடை நகரை சேர்ந்த எலக்ட்ரீசியன் விஜயசங்கர் (வயது 48) என்பவர், ஈரோடு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜவகரிடம் நேற்று புகார் மனு அளித்தார். அந்த மனுவில் அவர் கூறியிருப்பதாவது:-

பிரதமர் நரேந்திர மோடி கடந்த 2019-ம் ஆண்டு பண மதிப்பிழப்பு நடவடிக்கை எடுத்த காலக்கட்டத்தில், என்னை நஞ்சை ஊத்துக்குளியை சேர்ந்த ஸ்டூடியோ உரிமையாளர், ஜோதிடர் மற்றும் நிலத்தரகர் ஆகியோர் அணுகினர். அவர்கள் பிரதமரின் கருப்பு பண ஒழிப்பு நடவடிக்கை மூலமாக ஏழை மக்களுக்கு பெரும் தொகை வழங்கப்பட உள்ளது என கூறினர்.

மோசடி

மேலும், அந்த தொகையை பெற, ஏஜெண்ட் மூலம் முன்பணம் செலுத்த வேண்டும் என்றும், ரூ.1 லட்சம் செலுத்தினால் ரூ.1 கோடி வங்கி கணக்குக்கு வரும் எனவும் ஆசை வார்த்தை கூறினார்கள். இதை நம்பி முதல் கட்டமாக ரூ.1 லட்சம் செலுத்தினேன். அதைத்தொடர்ந்து பணம் வரவில்லை என கூறியதால் கூடுதலாக ரூ.2 லட்சத்து 10 ஆயிரம் செலுத்த கூறியதால் அந்த பணத்தையும் செலுத்தினேன்.

ஆனால், அவர்கள் கூறியபடி எனது வங்கி கணக்குக்கு எந்த பணமும் வரவில்லை. இதனால், எனது அறியாமையை பயன்படுத்தி என்னை ஏமாற்றி, பணம் பெற்று மோசடி செய்ததை உணர்ந்தேன். எனவே அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுத்து எனது பணத்தை மீட்டு தர வேண்டும்.

இவ்வாறு அந்த மனுவில் கூறியிருந்தார்.

பல லட்சம் ரூபாய் மோசடி

இதேபோல், மொடக்குறிச்சியை சேர்ந்த கட்டிட தொழிலாளி சண்முகம் என்பவரிடம் ரூ.4 லட்சத்து 80 ஆயிரமும், துர்கா தேவி என்பவரிடம் ரூ.1 லட்சத்து 30 ஆயிரமும், துரித உணவகம் நடத்தி வரும் ஆசியாவிடம் ரூ.1 லட்சத்து 80 ஆயிரமும், எலக்ட்ரீசியன் கோபாலகிருஷ்ணன் என்பவரிடம் ரூ.20 ஆயிரமும் என மொத்தம் ரூ.11 லட்சத்து 20 ஆயிரம் மோசடி செய்துள்ளனர். இவர்கள் அனைவரும் தனித்தனியாக ஈரோடு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜவகரிடம் மனு அளித்தனர். மேலும், எங்களிடம் மோசடி செய்த நபர்கள் மொடக்குறிச்சி பகுதியில் 40-க்கும் மேற்பட்ட நபர்களிடம் பிரதமர் பெயரை பயன்படுத்தி வெளிநாட்டில் உள்ள கருப்பு பணம் அறக்கட்டளை மூலமாக வங்கி கணக்குக்கு வரும் என கூறி பல லட்சம் ரூபாய் பெற்று மோசடி செய்திருப்பதாக பாதிக்கப்பட்டவர்கள் தெரிவித்தனர்.


Next Story