தலைமறைவான ரவுடி 4½ மாதத்துக்கு பிறகு கைது


தலைமறைவான ரவுடி 4½ மாதத்துக்கு பிறகு கைது
x
தினத்தந்தி 9 Dec 2022 1:00 AM IST (Updated: 9 Dec 2022 1:01 AM IST)
t-max-icont-min-icon

கொலை வழக்கில் ஜாமீனில் வெளியே வந்து தலைமறைவான ரவுடி 4½ மாதத்துக்கு பிறகு கைது செய்யப்பட்டார்.

சேலம்

சேலம்:-

கொலை வழக்கில் ஜாமீனில் வெளியே வந்து தலைமறைவான ரவுடி 4½ மாதத்துக்கு பிறகு கைது செய்யப்பட்டார்.

பிரபல ரவுடி கொலை

சேலம் கிச்சிப்பாளையம் பகுதியை சேர்ந்தவர் செல்லதுரை. இவர் கடந்த 2020-ம் ஆண்டு டிசம்பர் மாதம் கொலை செய்யப்பட்டார். இதுதொடர்பாக கிச்சிப்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி ரவுடி ஜான் உள்பட 32 பேரை கைது செய்தனர்.

இந்த கொலை வழக்கு விசாரணை சேலம் மாவட்ட முதன்மை கோர்ட்டில் நடைபெற்று வருகிறது. இதற்கிடையில் கடந்த ஜூலை மாதம் சிறையில் இருந்து ஜான் ஜாமீனில் வெளியே வந்தார். பின்னர் அவர் கொலை வழக்கு தொடர்பாக கோர்ட்டில் ஆஜராகாமல் திடீரென தலைமறைவானார்.

இதையடுத்து அவருக்கு பிடிவாரண்டு பிறப்பித்து கோர்ட்டு உத்தரவிட்டது. மேலும் அவரை பிடிக்க போலீஸ் இன்ஸ்பெக்டர் சீனிவாசன் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது.

கைது

ஜானை பல்வேறு இடங்களில் போலீசார் தேடி வந்தனர். இந்த நிலையில் அவர் நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் பகுதியில் பதுங்கி இருப்பதாக தனிப்படை போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் போலீசார் அங்கு விரைந்து சென்று ஜானை கைது செய்தனர்.

தலைமறைவாக இருந்த ஜான், 4½ மாதங்களுக்கு பிறகு கைது செய்யப்பட்ட நிலையில், அவரை போலீசார் சேலம் அழைத்து வந்து மாவட்ட முதன்மை கோர்ட்டில் ஆஜர்படுத்தினர். பின்னர் கோர்ட்டு உத்தரவின் பேரில், ஜானை சேலம் மத்திய சிறையில் போலீசார் அடைத்தனர்.


Next Story