போதை பொருள் தடுப்பு விழிப்புணர்வு உறுதிமொழி ஏற்பு
மதுரை மாவட்டத்தில் போதை பொருள் தடுப்பு குறித்து விழிப்புணர்வு உறுதிமொழி ஏற்கப்பட்டது.
மதுரை மாவட்டத்தில் போதை பொருள் தடுப்பு குறித்து விழிப்புணர்வு உறுதிமொழி ஏற்கப்பட்டது.
போதை ஒழிப்பு
மதுரை மத்திய சிறை மற்றும் அதனை சார்ந்த கிளை சிறைகளில் போதை பொருட்களுக்கு எதிராக விழிப்புணர்வு உறுதிமொழி ஏற்கும் நிகழ்வு நடந்தது. அதில் மதுரை மத்திய சிறை டி.ஐ.ஜி. பழனி தலைமையில் சிறை சூப்பிரண்டு பரசுராமன் முன்னிலையில் கைதிகள் விழிப்புணர்வு உறுதிமொழி எடுத்து கொண்டனர். அதில் சிறையில் உள்ள கைதிகள் போதை பழக்கத்தால் ஏற்படும் தீய விளைவுகளை நான் முழுமையாக அறிவேன். நான் போதை பழக்கத்திற்கு ஆளாக மாட்டேன். மேலும் எனது குடும்பத்தினரையும், நண்பர்களையும் போதை பழக்கத்திற்கு ஆளாகாமல் தடுத்து அவர்களுக்கு அறிவுரைகளை வழங்குவேன்.
போதை பழக்கத்திற்கு உள்ளானவர்களை மீட்டெடுத்து அவர்களை நல்வழிப்படுத்த எனது முழு பங்களிப்பை அளிப்பேன். போதை பொருட்களின் உற்பத்தி நுகர்வு பயன்பாடு ஆகியவற்றிற்கு எதிரான தடுப்பு நடவடிக்கைகளின் மூலம் போதை பொருட்களை தமிழ்நாட்டில் வேரறுக்க துணை நிற்பேன் என்று உறுதி மொழி ஏற்றுக்கொண்டனர்.
உறுதிமொழி ஏற்பு
பேரையூரில் உள்ள அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் போலீசார் சார்பாக போதை பொருள் இல்லாத தமிழ்நாடு என்ற தலைப்பில் விழிப்புணர்வு உறுதிமொழியை போலீசாரும், பள்ளி மாணவர்களும் எடுத்தனர். பேரையூர் துணை போலீஸ் சூப்பிரண்டு இலக்கியா, பள்ளி மாணவர்களிடம் பேசும்போது, போதை பொருள் குறித்து விழிப்புணர்வும், போதை பொருட்களினால் ஏற்படும் தீமைகள் குறித்தும் பள்ளி மாணவர்கள் தங்கள் நண்பர்களுக்கும், தங்கள் குடும்பத்தில் உள்ளவர்களுக்கும் எடுத்து கூற வேண்டும் என்று பேசினார். நிகழ்ச்சியில் பள்ளி தலைமை ஆசிரியர் வெள்ளைபாண்டி மற்றும் போலீசார், மாணவர்கள் கலந்து கொண்டனர்.
அதேபோல் திருமங்கலம் மெப்கோ ஸ்லெங்க் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் நடந்த விழிப்புணர்வு உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சியில் திருமங்கலம் துணை போலீஸ் சூப்பிரண்டு வசந்தகுமார் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பேசினார். இதில், தலைமை ஆசிரியை ஈஸ்டர் ஜோதி மற்றும் மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.
விழிப்புணர்வு
புதூர் அல் அமீன் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்ற போதை பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சியில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ஜெய்சங்கர் கலந்து கொண்டு பேசினார். இதில், தலைமை ஆசிரியர் ஷேக்நபி உள்பட பலர் கலந்து கொண்டனர். ஒத்தக்கடை தொடக்கப்பள்ளியில் முதன்மை கல்வி அலுவலர் கார்த்திகா வழிகாட்டுதலின்படி முதன்மை கல்வி அலுவலக ஒருங்கிணைப்பாளர் செந்தில்வேல்குமரன் தலைமையில் நடந்த நிகழ்ச்சியில் கிராம நிர்வாக அலுவலர் மகாலிங்கம், தலைமை ஆசிரியை மாலா மற்றும் பலர் கலந்து கொண்டு விழிப்புணர்வு உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர்.