குமாரபாளையத்தில் ஸ்கூட்டரில் சென்றபோதுசரக்கு வாகனம் மோதி மாமியார், மருமகன் பலி
குமாரபாளையம்:
குமாரபாளையத்தில் ஸ்கூட்டரில் சென்றபோது சரக்கு வாகனம் மோதி மாமியார், மருமகன் பலியாகினர்.
வடமாநிலத்தவர்கள்
மேற்கு வங்காள மாநிலத்தை சேர்ந்தவர் ஜஹாங்கீர் காசி (வயது 30). இவருடைய மனைவி பாத்திமா காதன் (25). ஜஹாங்கீர் காசி ஈரோடு மாவட்டம் பெருந்துறையில் உள்ள தனியார் ஆயத்த ஆடை தயாரிப்பு நிறுவனத்தில் லைன் மேற்பார்வையாளராக வேலை செய்து வந்தார். இதனால் கணவன், மனைவி பெருந்துறை பணிக்கம்பாளையத்தில் வாடகைக்கு வீடு எடுத்து வசித்து வந்தனர். இவர்களுடன் பாத்திமா காதனின் தாயாரான தாரா காசி (50) என்பவரும் இருந்தார்.
இந்த நிலையில் தாரா காசிக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டது. இதனால் அவருக்கு சேலத்தில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற முடிவு செய்யப்பட்டது. இதையடுத்து நேற்று காலை 8.30 மணி அளவில் ஜஹாங்கீர் காசி தனது மனைவி மற்றும் மாமியாருடன் ஒரு ஸ்கூட்டரில் சேலத்துக்கு புறப்பட்டார்.
பலி
அப்போது தேசிய நெடுஞ்சாலையில் நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் போலீஸ் எல்லைக்குட்பட்ட நேரு நகர் பகுதியில் சென்றபோது, அந்த வழியாக வேகமாக வந்த சரக்கு வாகனம் ஸ்கூட்டர் மீது மோதியது. இதில் ஸ்கூட்டரை ஓட்டி வந்த ஜஹாங்கீர் காசி, மாமியார் தாரா காசி ஆகியோர் கீழே விழுந்து படுகாயம் அடைந்து உயிருக்கு போராடினர். பாத்திமா காதன் லேசான காயம் அடைந்தார்.
இதையடுத்து 3 பேரும் மீட்கப்பட்டு ஆம்புலன்ஸ் மூலம் குமாரபாளையம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டனர். ஆனால் செல்லும் வழியிலேயே ஜஹாங்கீர் காசி, தாரா காசி ஆகியோர் பரிதாபமாக இறந்தனர். பாத்திமா காதன் லேசான காயத்துடன் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்த விபத்து குறித்து குமாரபாளையம் போலீஸ் இன்ஸ்பெக்டர் தவமணி, சப்-இன்ஸ்பெக்டர் சந்தியா ஆகியோர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.